இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 376 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் நாள் சிறப்பாக ஆடி சதமடித்த அஸ்வின், அரைசதம் அடித்த ஜடேஜா ஆகியோர் இன்று இரண்டாவது நாள் இன்னிங்ஸை தொடங்கினர். ஜடேஜா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களம் புகுந்த ஆகாஷ் தீப் 17 ரன்கள்எடுத்து அவுட்டாக, அஸ்வின் தன் பங்குக்கு 113 ரன்கள் குவித்து கேட்ச் என்ற முறையில் விக்கெட்டை இழந்தார். பும்ரா 7 ரன்களில் அவுட்டாக இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து வங்கதேச அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியில் ஷாத்மன் இஸ்லாம், ஜாஹீர் ஹசன் ஓப்பனிங் இறங்கினர். சென்னை பிட்ச் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பதால் இந்திய அணி ஆரம்பம் முதலே துல்லியமான வேகப்பந்துவீச்சை வீசத் தொடங்கியது. ஓப்பனிங் ஓவர் வீசிய ஜஸ்பிரித் பும்ரா, முதல் 5 பந்துகளை ஓவர் தி விகெட்டில் வீசினார். இதில் இரண்டு ரன்களை எடுத்திருந்த வங்கதேச அணி, கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தது. அதாவது, ஆறாவது பந்தை மட்டும் அரவுண்ட் விக்கெட்டில் வந்து புயல்வேகத்தில் பும்ரா வீச, ஸ்டிரைக்கில் இருந்த இஸ்லாம் இந்த பந்தை ஆட முடியாது, அதேநேரத்தில் ஸ்டம்பிலும் அடிக்காது என நினைத்து விட்டார்.
ஆனால் பந்து சரியாக ஆப்ஸ்டம்பு மீது இருந்த பெயில்ஸை பதம் பார்த்து, இந்திய அணிக்கு முதல் விக்கெட்டை பெற்றுக் கொடுத்தது. இதன்பிறகாவது வங்கதேச அணி வீரர்கள் சுதாரித்துக் கொள்வார்கள் என பார்த்தால், அதற்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் இன்னொரு முறையில் அட்டாக்கை ஆரம்பித்தார் ஆகாஷ் தீப். அவருக்கு முதல் ஓவரில் விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும், இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கிளீன் போல்டாக்கி வங்கதேச அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கை சீர்குலைத்தார். இதனால் வங்கதேச அணி 8.2 ஓவரிலேயே 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தில் சிக்கியது.
இதற்கு மிக முக்கிய காரணம் ஆகாஷ் தீப் தான். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவர், அந்த டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். இப்போது வங்கதேச டெஸ்ட் தொடரிலும் ஆரம்பத்திலேயே சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். முகமது ஷமி இல்லாததால், அந்த வாய்ப்பு இவருக்கு வந்த நிலையில், அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். முகமது சமி காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி ஓய்வில் இருக்கும் அவர், இப்போது தான் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியிருக்கிறார். ஆகாஷ் தீப் வேறு சிறப்பாக பந்துவீசுவதால், மீண்டும் முகமது ஷமி எப்போது இந்திய அணிக்கு அழைக்கப்படுவார் என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.