வெளிநாட்டு வேலைக்கு மதிமுகவினரை மட்டும் அப்ளை செய்யச் சொன்னது ஏன்? – துரை வைகோ பளீச் பதில்!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரில் மெக்கானிக் உள்ளிட்ட சில வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்றும், சம்பளம் ஆயிரம் டாலர் வரை கிடைக்கும் என்றும், ம.தி.மு.க., உறுப்பினர்கள் குடும்பங்களில் தகுதி இருப்பவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும் என்றும் சில தினங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார் ம.தி.மு.க., அமைப்புச் செயலாளர் துரை வைகோ.

திருச்சிராப்பள்ளி தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு துரை வைகோ எல்லோருக்கும் பொதுவான மக்கள் பிரதிநிதி. அவர் இப்படி தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு மட்டும் தனியாக எதையும் செய்ய நினைப்பது எந்த வகையில் நியாயம் எனப் பல தரப்பிலிருந்தும் இந்த அறிவிப்பு குறித்து முணுமுணுப்புகள் வரவே, துரை வைகோவையே தொடர்பு கொண்டு பேசினோம்.

துரை வைகோ

”வேலை வாய்ப்புக்கான முகாம் மாதிரி பெரிய நிகழ்வு இல்லைங்க அது. அங்க இருக்கிற ஓரிரு பெரிய நிறுவனங்களில் சில வேலைகளுக்கு ஆட்கள் தேவைனு எங்களுக்குத் தெரிய வந்தது. பொதுவாக வெளிநாடுகளில் இந்தியர்களை வேலைக்கு எடுக்க இப்பெல்லாம் ஆர்வம் காட்டுறாங்க. எங்களுக்குத் தகவல் வந்ததும், அந்த வேலைகள் நம்ம கட்சிக்காரர்களுக்குப் பயன்படுமா எனப் பார்த்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க சொன்னது நிஜம்தான். கட்சியின் இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி கிட்ட இதைக் கவனிக்க சொன்னேன்.

தகவல் வெளியில் வந்ததுமே சிலர் இந்த மாதிரி கட்சிக்காரர்களுக்கு மட்டும் முன்னுரிமைனு எப்படிச் சொல்லலாம்னு விமர்சனம் பண்றாங்கன்னு என் காதுக்கும் வந்திச்சு. அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சி தொடர்பான வேலைகள் இருந்ததால் உடனடியாக இது தொடர்பான விளக்கம் தர முடியலை” என்றவர், தொடர்ந்தார்..

வைகோ

“ம.தி.மு.க., தொடங்கி முப்பது வருஷமாச்சு. இதுவரைக்கும் ஆட்சிப்  பொறுப்புக்கு வரல. கட்சி தொடங்கிய போது லட்சக்கணக்கான தொண்டர்கள் குடும்பங்களா எங்களை நம்பி வந்தாங்க. அதுல பெரும்பாலானவங்க இன்னைக்கு வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் கட்சியில இருக்காங்க. சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சிப் பிரதிநிதிகளா ரொம்ப குறைவான எண்ணிக்கையில்தான் பதவிகளை வகிச்சிருக்காங்க எங்க ஆளுங்க. அவங்களால கட்சிக்காரங்க எல்லோருக்கும் தேவைப்படும் உதவிகளைச் செய்ய முடியலை. 

அதனால்தான் இந்த மாதிரி சில வாய்ப்புகள் வர்றப்ப கட்சிக்காரர்களுக்கு முன்னுரிமை தர முடியுமான்னு பார்க்க சொல்லுங்கனு சொல்றோம். நான் நாடாளுமன்றத்துக்குத் தேர்வாகிறதுக்கு முன்னாடியும் கூட இந்த மாதிரியான விஷயங்களைக் கட்சிக்காரங்களுக்குச் செய்திருக்கேன். இப்ப எம்.பி.,யா இருக்கறதுனால இந்த விஷயத்தைப் பெருசு படுத்தறாங்க.

முதல்ல சொன்ன மாதிரி தனிப்பட்ட முறையில் ஒரு சிறு வாய்ப்பா கிடைச்சதை கட்சிக்காரங்க பயன்படுத்தட்டுமேனு நினைச்சது உண்மைதான். இதைத் தப்புன்னா என் கட்சி உறுப்பினர்களுக்காக அந்தப் பழியை நான் ஏத்துக்கிறேன்.

துரை வைகோ

அதேநேரம் திருச்சி தொகுதி மக்களுக்கு ஒரு எம்.பி.யா செய்ய நிறைய திட்டங்கள் எங்கிட்ட இருக்கு. அதை ஒவ்வொண்ணா நிறைவேற்றப் பாடுபட்டிட்டிருக்கேன். கந்தர்வகோட்டையில் நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கிற மாதிரியெல்லாம் ஒரு ஸ்கீம் இருக்கு. அதுங்களையெல்லாம் நிறைவேத்துறப்ப கட்சி வித்தியாசம் பார்க்காமல் தொகுதி மக்கள் எல்லாரும் பயனடையிற மாதிரி நிச்சயம் பண்ணுவோம்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.