147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ஜெய்ஸ்வால்

சென்னை,

இந்தியா – வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்மூல் ஹொசைன் சாண்டோ பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டகாரரான ரோகித் 6 ரன்களிலும், கில் டக் அவுட் ஆகியும், கோலி 6 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். மூவரின் விக்கெட்டையும் ஹசன் மக்மூத் காலி செய்தார்.

இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த ஜெய்ஸ்வால் – பண்ட் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அணியை ஒரளவு சரிவிலிருந்து மீட்டனர். ரிஷப் பண்ட் தனது பங்குக்கு 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த கே.எல். ராகுல் 16 ரன்களில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்த நிலையில் 56 ரன்களில் கேட்ச் ஆனார்.

பின்னர் ஆல் ரவுண்டர்களான அஸ்வின் – ஜடேஜா பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர். இதன் மூலம் சரிவிலிருந்து மீண்ட இந்தியா முதல் நாளில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் குவித்துள்ளது. அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்காளதேசம் தரப்பில் ஹசன் மக்மூத் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் அடித்த 56 ரன்களையும் சேர்த்து சொந்த மண்ணில் இதுவரை 10 இன்னிங்சில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் 768 ரன்கள் குவித்துள்ளார்.

இதன் மூலம் 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் விளையாடிய முதல் 10 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீசின் ஜார்ஜ் ஹெட்லி 747 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள ஜெய்ஸ்வால் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1 ஜெய்ஸ்வால் (இந்தியா) – 758 ரன்கள்

2.ஜார்ஜ் ஹெட்லி (வெஸ்ட் இண்டீஸ்) – 747 ரன்கள்

3.ஜாவேத் மியாந்தத் (பாகிஸ்தான்) – 743 ரன்கள்

4. டேவ் ஹூட்டன் (ஜிம்பாப்வே) – 687 ரன்கள்

5.சர் விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) – 680 ரன்கள்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.