தஞ்சாவூரில் ‘கலைஞர் 100 வினாடி – வினா’ போட்டி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., கலந்துகொண்டார். அதற்குப் பிறகுச் செய்தியாளர்களிடம் பேசியவர், “ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே மொழி இப்படியாக எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு வருகிறார்கள். அதன் மூலமாக மாநிலங்களுக்கான உரிமையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்க வேண்டும் என பா.ஜ.க., அரசு செயல்படுகிறது.
தற்போது, ஒரே நாடு ஒரே தேர்தலால், மக்களுக்கு என்ன பயன்?, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியானது அதன் பதவிக்காலம் முடிவு பெறாத நிலையிலிருந்தால் என்ன செய்வது என்று யோசிக்காமல், தங்களுக்கு லாபம் தரக்கூடிய ஒன்றைச் செயல்படுத்த பா.ஜ.க., நினைக்கிறது. மேலும், தங்களின் கருத்துக்களை நாடு முழுவதும் திணிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பா.ஜ.க.,வினர் செயல்படுகிறார்கள்.
ஆனால், முதல்வர் ஸ்டாலினும், தி.மு.க.,-வும் இதை எதிர்க்கிறது. நாட்டின் ஜனநாயகத்திற்கும், மாநில உரிமைகளுக்கும் எதிராக இருப்பதை தி.மு.க., ஏற்றுக்கொள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட அதிகாரிக்குப் பதிவு உயர் வழங்கப் பட்டுள்ளது தொடர்பாக, விசாரணை நடத்தித் தீர்வு காணப்படும்.” என்றார்.