த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது.
ரஜினியுடன் இந்த படத்தில் அமிதாப் பச்சன், ரானா, ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அனிருத் இசையில் ஏற்கெனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியிருந்தன. இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் ரஜினி குறித்தும் ‘வேட்டையன்’ படம் குறித்தும் பேசியிருக்கும் அனிருத், “த.செ.ஞானவேல் சாரோட ‘ஜெய் பீம்’ படத்தோட ரசிகன் நான். இந்த மாதிரி எந்தப் படத்துக்கும் நான் மியூசிக் போட்டதில்ல. ரஜினிசாரோட ரொம்ப வித்தியாசமான படம் இது. ரொம்ப நல்ல கதை. தலைவர் இந்த மாதிரி படம் பண்றது நம்ம சினிமாவுக்கு ஒரு நல்ல விஷயமாக இருக்கும்.
நானும் நிறைய ஆடியோ லாஞ்ச்க்கு போயிருக்கேன். ஆனா ரசிகர்களோட இந்த மாதிரியான ஒரு சவுண்ட நான் கேட்டதில்ல. இந்த அரங்கத்துல அவர் நடந்து வரும்போது, தியேட்டர்ல அவரை பார்க்கும்போது கிடைக்கிற சந்தோசம் எந்த விருதும் கொடுக்காது.
எனக்குப் பிடிச்ச திரைப்படம் ‘அண்ணாமலை’. அந்தப் படத்துல இந்த தேர்தல்ல ஜெயிச்சது அண்ணாமலைனு ஒரு காட்சி வரும், அதுக்குப் பிறகு வக்கீல்கூட ஒரு காட்சியில பேசுவாரு. எனக்கு எந்த பிரஷர் வந்தாலும் இந்த சீனை திரும்பத் திரும்பப் பார்ப்பேன். இந்தப் படத்துல தலைவருக்கு யாரோட குரலை ஓப்பனிங் சாங் பண்ணலாம்னு யோசிக்கும்போது. தலைவர்தான் மலேசியா வாசுதேவன் சாரோட குரல் வச்சு பண்ணலாம்னு சொன்னாரு. நானும் ரஜினி ரசிகர்கள் கூட்டத்தில் ஒருத்தந்தான். உங்களை மாதிரி ‘உசுரைக் கொடுக்க நூறு பேருல’ நானும் ஒருத்தன். அக்டோர் 10-ம் தேதி இரை விழும்” என ‘குறி வச்சா இரை விழும்’ என்ற ரஜினியின் ‘வேட்டையன்’ பட வசனத்தோடு பேசி முடித்தார் அனிருத்.