Vettaiyan : `நெல்சன், லோகேஷ் மாதிரி இல்லாம, வேற மாதிரி பண்ணலாம்னு சொன்னாரு…' – ரஜினிகாந்த்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி ரிலீஸாகிறது.

ரஜினியுடன் இந்த படத்தில் அமிதாப் பச்சன், ரானா, ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அனிருத் இசையில் ஏற்கெனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியிருந்தன. இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய ரஜினி, “இந்த இடத்துக்கு ‘ஜெயிலர்’ படத்துக்காக வந்திருந்தேன். இப்போ ‘வேட்டையன்’ படத்துக்காக வந்திருக்கேன். ஒரு இயக்குநருக்கு தோல்வி வந்துச்சுனா, அடுத்த ஹிட் கொடுக்கிற வரைக்கும் நிம்மதி இருக்காது. அதேமாதிரி ஹிட் கொடுத்தவங்களுக்கும் நிம்மதி இருக்காது. ஏன்னா.. ஒருத்தர் முன்னாடி ஓடினதை விட, இன்னும் வேகமாக ஓடணும். இல்லைனா முன்னாடி மாதிரி இல்லனு சொல்லிடுவாங்க. அதேமாதிரி ‘ஜெயிலர்’ மிகப்பெரிய ஹிட் ஆனதுக்குப் பிறகு, ‘லால் சலாம்’ படத்துல நான் கெஸ்ட் ரோல்ல நடிச்சேன்.

ரஜினி

இப்போதெல்லாம் நல்ல இயக்குநர் கிடைக்கிறது ரொம்பக் கஷ்டமாக இருக்கு. வெற்றிமாறன்லாம் இருக்காங்க… முன்னாடி கதை, திரைக்கதை தனியாக இருக்கும். இயக்கம் தனியாக இருக்கும். ஆனா இன்னைக்கு அப்படி இல்ல… எல்லாம் ஒரே இடத்துல இருக்கு. இப்போ பெரிய மாஸ் ஹீரோ மட்டும் இருந்தால் அந்தப் படம் ஹிட் ஆகாது. நல்ல தயாரிப்பு நிறுவனமும் வரணும் அப்போதான் அந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு வரும்.

‘ஜெய் பீம்’ படம் பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. த.செ.ஞானவேல் சொன்ன மாதிரி, ‘எந்தவொரு நல்ல படத்தையும் பாராட்டுகிற நான், ‘ஜெய் பீம்’ படத்த பாராட்டல.

‘ஜெய் பீம்’ பார்த்ததுக்குப் பிறகு அது அவரோட முதல் படம் இல்லைன்னு தெரிஞ்சது. அப்புறம் செளந்தர்யா, ஞானவேல் லைன்ல இருக்குறதா சொன்னாங்க. அப்புறம் நான் அவர்கிட்ட ‘நீங்க மெசேஜ் சொல்லுவீங்க. நமக்கு மெசேஜ் செட் ஆகாது. மக்கள் கொண்டாடணும். கமர்ஷியலா இருக்கணும்’னு சொன்னேன்., 10 நாள் டைம் கேட்டார். ஆனா 2 நாள்ல கால் பண்ணினார்.

நான் கமெர்ஷியலா பண்றேன் ஆனா… நெல்சன், லோகேஷ் மாதிரி இல்லாம ரசிகர்கள் உங்களை ரசிக்கிற மாதிரி, வேற ஒரு கண்ணோட்டத்தைக் காட்டுறேன்னு சொன்னார். அப்போ நான் அதுதான் வேணும். அவங்களை மாதிரி வேணும்னா நான் நெல்சன், லோகேஷ் கிட்டயே போயிருப்பேன்னு சொன்னேன். இயக்குநர் என்கிட்ட 100% அனிருத் வேணும்னு சொன்னாரு. அப்போ நான் எனக்கு 1000% அனிருத்தான் வேணும்னு சொன்னேன்.

ரஜினி

இந்தப் படத்தில சத்யதேவ்னு ஒரு கதாபாத்திரம் இருக்கு. அந்த கதாபாத்திரத்துக்கு சிவாஜி சார் இருந்தால் பண்ணியிருப்பாங்க. அமிதாப் சார்னு சொன்னதும் எனக்கு தூக்கி போட்ருச்சு. ரெண்டு நாள்ல அமிதாப் ஜி நடிக்கிறதுக்கு ஒத்துக்கிட்டாங்கனு சொன்னாங்க. அதே மாதிரி வில்லன் யாருனு கேட்கும்போது ராணானு சொன்னார். அப்புறம் படத்துல முக்கியமான பொழுதுபோக்குக் கதாபாத்திரத்துல பகத் பாசில்தான் நடிக்கணும்னு சொன்னார். அதேமாதிரி பகத் மலையாளத்துல நல்ல படங்கள் பண்றாருன்னு சொன்னாங்க. அப்புறம் ‘பகத் சார்கிட்ட பேசிட்டேன். சம்பளம் கூட வேண்டாம்.. நடிக்க வரேன்னு சொல்றாருன்னு’ இயக்குநர் என்கிட்ட சொன்னார்.

ஆனா அவருக்கு இப்போ டேட் இல்ல. பகத்துக்காக கொஞ்சம் காத்திருக்கலாம்னு சொன்னாங்க. நான் தயாரிப்பாளர் கிட்ட பேசுங்கன்னு சொன்னேன். எனக்காக லோகேஷ் கனகராஜ் வேற காத்திட்டு இருந்தார். அப்போ லோகேஷ் கிட்ட கொஞ்சம் நம்ம ஷூட் தள்ளி வச்சுக்கலாம்னு சொன்னேன். உடனே லோகேஷ் ஓகே சொல்லிட்டார். அப்போதான் தெரிஞ்சது.. லோகேஷ் இன்னு கதையை சரியா பண்ணி முடிக்கலைனு. ராணாவை வில்லனாக பார்த்தா எனக்கே பயம் வரும். பகத் பாசில் என்ன மாதிரியான ஒரு நடிகர்… ரொம்பவே இயற்கையாக நடிச்சார். கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க போறதாக சொன்னாங்க. அப்போ அவங்களோட ‘அசுரன்’ படம் பாத்தேன். நேர்ல சும்மா தக தகனு மஞ்சு இருந்தாங்க.

ரானா

அமிதாப் பச்சன் பற்றி இன்றைய 2கே கிடஸ்க்குத் தெரியாது. அவர்கிட்ட இருந்து அவ்வளவு விஷயங்கள் நான் கத்துக்கிட்டேன். அமிதாப் பச்சனும் ராஜிவ் காந்தியும் சேர்ந்து படிச்சவங்க. அமிதாப் ஜியோட அப்பா மிகப்பெரிய எழுத்தாளர். அவருக்கு இருந்த செல்வாக்குக்கு என்னவேனாலும் பண்ணியிருக்கலாம். ஆனா அவருக்கு நடிக்கணும்னு விருப்பம் இருந்தது.

ஆனால் அவங்க குடும்ப செல்வாக்கு இல்லமா, தனியாக கரியருக்கு வந்தாரு. ஒரு முறை அமிதாப் ஜீக்கு பயங்கரமான விபத்து நிகழ்ந்தது. அந்த சமயத்துல இந்திரா காந்தி வெளிநாட்டுல ஒரு மாநாட்டுக்கு போயிருந்தாங்க. இவருக்கு விபத்துன்னு தெரிஞ்சதும் உடனடியாக இந்தியா வந்தாரு. அப்போதான் எல்லோருக்கும் தெரிஞ்சது ராஜிவ் காந்தியும் அமிதாப் ஜியும் சேர்ந்து படிச்சவங்கன்னு. அமிதாப் ஜி ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சாரு. ஆனால் அது நஷ்டமாகிடுச்சு. அப்போ மும்பை சிரிச்சது. நல்ல இடத்துக்கு போன நிறைய பேர் எப்போடா விழுவான்னு காத்திருப்பாங்க. அப்போதும் அமிதாப் ஜி ஒரு இயக்குநர் வீட்டுக்கு போய் எனக்கு வேலை வேணும்னு சொல்லியிருக்காரு. வேலை செஞ்சாதான் சம்பளம் வாங்குவேன்னு சொன்னார்.

அமிதாப் பச்சன், ரஜினி

அப்புறம் டிவி ஷோ, பல் பொடி, ஷூ பாலிஷ் விளம்பரம்னு நிறைய அமிதாப் நடிச்சாரு. மறுபடியும் வித்த வீடு எல்லாத்தையும் வாங்குனார். மேல கீழனு வாழ்க்கை நகரும். டைம் ஒரு நைட்ல மேலவும் கூட்டிகிட்டு போகும்… கீழவும் கூட்டிகிட்டு போகும். மன்னன் படத்தோட ஷூட்டிங்ல ரவி ஒரு சின்ன குழந்தையை கூட்டிட்டு வந்தாங்க… அப்போ அந்த குழந்தையை நான் சிம்மாசனத்துல வச்சு போட்டோ எடுத்தேன். இன்னைக்கு அனிருத் இசை சிம்மாசனத்துல இருக்காரு. இந்த படம் ஞானவேலுக்காக ஹிட் ஆகணும். அவர் நம்ம சினிமாவுக்கு தேவை” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.