கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 42 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளநிலை மருத்துவர்கள் இன்று (செப்.21) பணிக்குத் திரும்பினர். அங்குள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இளநிலை மருத்துவர்கள் சனிக்கிழமை அரசு நடத்தும் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் பணிக்குத் திரும்பினர்.
இது குறித்து போராட்டத்தில் முன்னணியில் இருந்த அனிகேத் மஹாதோ கூறுகையில், “இன்று முதல் நாங்கள் எங்களின் பணிகளில் மீண்டும் இணைகிறோம். எங்களுடைய சகாக்கள் இன்று காலை முதல் அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சைகளுக்கான தங்களின் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிக்குத் திரும்பியுள்ளனர். ஆனால் வெளி நோயாளிகள் பிரிவுகளில் யாரும் பணிக்குத் திரும்பவில்லை. இது பகுதி அளவிலான பணிக்குத் திரும்புதல் மட்டுமே என்பதை மறக்க வேண்டாம். எங்களின் பிற சகாக்கள் ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு பணிக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் மருத்துவ முகாம்கள் தொடங்குவார்கள். போராட்டத்துக்கு மத்தியிலும், பொது சுகாதாரத்துக்கான தங்களின் உறுதிப்பாட்டினை காட்டுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இளநிலை மருத்துவர்கள் பணிக்குத் திரும்பிய நிலையில், அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு இயல்பு நிலைக்குத் திரும்பியது. இதுகுறித்து பங்குரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள திபங்கர் ஜனா என்ற நோயாளி கூறுகையில், “இது எங்களுக்கு மிகப் பெரிய ஆறுதல். அவர்களின் போராட்டத்துக்கான காரணங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த வேலைநிறுத்தம் காரணமாக எங்களைப் போன்ற உள்நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டது” என்றார்.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள புர்பா மேதினிபூர் மாவட்டத்தின் பன்ஸ்குராவில் உள்ள மருத்துவ முகாம்களில் மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர். “இந்த க்ளினிக்குகளில் எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஏராளமான மக்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு எங்களுடைய சகாக்காள் சிகிச்சை அளிக்கின்றனர். நாங்கள் 24 மணி நேர சேவை வழங்குவதற்கும் தயாராக இருக்கிறோம். இது எங்களின் அர்ப்பணிப்பு” என்று அபயா க்ளினிக் (மருத்துவ முகாம்) ஒன்றில் பணிபுரியும் அகேலி சவுத்ரி என்ற இளநிலை மருத்துவர் தெரிவித்தார்.
“ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் படுகொலை செய்யப்பட்ட மருத்துவரின் கொலைக்கு நீதி வேண்டியும், மாநில சுகாதார செயலாளரை நீக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கைளை அரசு நிர்வாகம் இன்னும் ஏழு நாட்களுக்குள் நிறைவேற்றுகிறதா என்று நாங்கள் காத்திருந்து பார்ப்போம். அப்படி நடக்காத பட்சத்தில் அடுத்தச் சுற்று போராட்டத்துக்கு நாங்கள் தயாராவோம்” என்று போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துமனையில் ஆக.9-ம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அத்துடன் பணியிடத்தில் பாதுகாப்பான பணிச்சூழல் வேண்டியும், சுகாதார பணியாளர்களை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கும் ஊழல் முறைகளுக்கு காரணமான மூத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறது.