புதுடெல்லி: இந்தோ – பசிபிக் பிராந்திய அமைதி, வளம், வளர்ச்சிக்கான முக்கிய கூட்டமைப்பாக ‘குவாட்’ உருவெடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்காக மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று (செப்.21) அதிகாலை அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி. இந்த பயணத்தின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து உலக நிலவரங்கள் குறித்து பிரதமர் மோடி விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில், தனது பயணம் குறித்து பிரதமர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “குவாட் உச்சி மாநாட்டை ஒட்டி எனது சகாக்கள் ஜோ பைடன் (அமெரிக்க அதிபர்), அல்பனீஸ் (ஆஸ்திரேலிய பிரதமர்) கிஷிடா (ஜப்பான் பிரதமர்) ஆகியோரை சதிப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். குவாட் கூட்டமைப்பு இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் அமைதி, வளர்ச்சி, வளத்துக்காக செயல்படும் ஒருமித்த கருத்து கொண்ட மிகமுக்கிய குழுவாக உருவெடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான எனது சந்திப்பு இந்திய – அமெரிக்க உறவை மறுசீராய்வு செய்து அதை மேலும் அழப்படுத்த புதிய பாதைகளைக் காணச் செய்வதோடு, இந்திய, அமெரிக்க மக்களின் நலன் மற்றும் சர்வதேச நலனை மேம்படுத்துவதற்காகவும் அமையும்.
அதேபோல், அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்காவின் முக்கியத் தொழிலதிபர்களை நான் சந்திக்கவுள்ளேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பிரதமரின் அமெரிக்கப் பயணம் குறித்து மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்திரி, “பிரதமர் நரேந்திர மோடி மற்றும்அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் இருதரப்பு உயர் அதிகாரிகள் இடையேயான சந்திப்பு சனிக்கிழமை (இன்று) நடைபெறுகிறது. அப்போது விரிவான உலகளாவிய கூட்டாண்மையை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து இரு தலைவர்களும் ஆழமாக விவாதிக்க உள்ளனர்.
மேலும், இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் செழுமைக்கான (ஐபிஇஎஃப்) மேலும் 2 கூடுதல் தூண்களான தூய்மையான பொருளாதாரம் மற்றும் நியாயமான பொருளாதாரம் – இந்தியா அணுகலை முறைப்படுத்துவதற்கான ஒப்பந்தங்களின் பரிமாற்றம் குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்படும்.
அமெரிக்க அதிபரின் சொந்த ஊரான டெலாவரில் உள்ள வில்மிங்டனில் நடைபெறும் இந்த சந்திப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகிய இருவருடனும் பிரதமர் மோடி சமீபத்தில் நடத்திய சந்திப்புகள் குறித்தும் பைடனிடம் மோடி விரிவாக எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எந்தவித சமாதான முயற்சியையும் முன்மொழியவில்லை. இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் அச்சுறுத்தலைப் பற்றி விவாதிப்பதுடன், குவாட் கூட்டத்தில் சுகாதார பாதுகாப்பு, காலநிலைமாற்றம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், எச்ஏடிஆர் உள்கட்டமைப்பு, இணைப்பு, கடல் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும்.” எனத் தெரிவித்திருந்தார்.