சிதம்பரம்: `2,000 ஏக்கர் நிலங்களை விற்றுவிட்டோமா?' – அரசின் குற்றச்சாட்டும் தீட்சிதர்கள் விளக்கமும்!

`சிதம்பரம் நடராஜர் கோயில் 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த காலகட்டத்தில் பக்தர்களின் காணிக்கை மூலம், ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வருவாயாக வந்தது. அதன் பிறகு தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்றதிலிருந்து, ஆண்டுக்கு வெறும் இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே வருவதாக கணக்கு காட்டுகிறார்கள். அதனால் கோயிலின் வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் கோயில் வளாகத்திற்குள் நடைபெறும் சட்டவிரோத கட்டுமானப் பணிகளை நிறுத்தவும் உத்தரவிட வேண்டும்’ என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது இந்து சமய அறநிலையத்துறை.

நடராஜர் கோயில்

செப்டம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், கோயிலின் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம். அதையடுத்து நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில், அந்த வழக்கு கடந்த 19-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தீட்சிதர்கள் தரப்பில், கோயிலின் தணிக்கை செய்யப்பட்ட வரவு, செலவு தொடர்பான கணக்கு விவரங்கள் மூடி சீலிடப்பட்ட உரையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தீட்சிதர்கள் தரப்பில், “கோயிலுக்கு சொந்தமான 1,000 ஏக்கர் நிலங்களை, இந்து சமய அறநிலையத் துறையின் தாசில்தார் நிர்வகித்து வருகிறார். அந்த நிலத்திலிருந்து வாடகை வருவாயாக ரூ.93,000 மட்டுமே கிடைக்கிறது. காணிக்கை மற்றும் வரவு, செலவு கணக்கை பராமரிப்பதற்கு, தனி திட்டத்தை வகுக்க தயாராக இருக்கிறோம்” என்று கூறினர்.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில், “நடராஜர் கோயிலுக்கு 3,000 ஏக்கர் நிலங்கள் இருந்தன. அதில் தற்போது 1,000 ஏக்கர் மட்டுமே இருக்கின்றன. மீதம் 2,000 ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் தனிநபர்களுக்கு விற்றுவிட்டனர்” என்று குற்றம்சுமத்தப்பட்டது. அதையடுத்துப் பேசிய நீதிபதிகள், “2017-18 ஆண்டிலிருந்து, 2021-22 ஆம் ஆண்டு வரையிலான வரவு, செலவு கணக்கு புத்தகங்களை தாக்கல் செய்ய வேண்டும். பக்தர்கள் அளிக்கும் காணிக்கை, வரவு, செலவுகள் குறித்து கணக்கு வைப்பதற்கான நடைமுறையை உருவாக்கி, அதன் வரைவு நடைமுறையை பொது தீட்சிதர்கள் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல கோயிலுக்கு எத்தனை ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன என்பது குறித்தும் தாசில்தார் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல தீட்சிதர்கள் 2,000 ஏக்கர் நிலங்களை விற்றதற்கான முழு விபரங்களையும், ஆவணங்களுடன் இந்து அறநிலையத்துறை சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

சிதம்பரம் தீட்சிதர்கள்

இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் பத்திரிகை செய்தியில், “நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ரீ சபாநாயகர் கோயில் சார்பாக 2014 முதல் 2024 வரையிலான வரவு, செலவு கணக்கு விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல 05.09.2024 அன்று நடைபெற்ற விசாரணையில், வேறுவித இனங்களின் மூலம் பெறப்படும் தொகையால் கோயில் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும், பொது தீட்சிதர்கள் சார்பில் பக்தர்களுக்கு செய்யப்படும் வசதிகள் குறித்தும், இந்து சமய அறநிலையத்துறையின் உண்டியல் எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரத்துடன், உறுதிமொழி பத்திரத்துடன் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

பதிவுத்துறை சட்டத்தின் பிரிவு 22-A-ன் படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில் நிலங்களை பதிவு செய்வதற்கு தடை இருக்கிறது. அந்த தடையை மீறி நிலத்தை கோயிலுக்கு எழுதி வைத்த நபரோ அல்லது அவரது வாரிசுகளோ, மூன்றாவது நபருக்கு விற்க முடியாது. எந்த வகையில் பார்த்தாலும் 2,000 ஏக்கர் நிலத்தை எந்த தீட்சிதரும், அரசுத் துறைக்கு தெரியாமல் பதிவு செய்வதற்கு வாய்ப்பே இல்லை. உண்மை இப்படி இருக்க, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்ற நடவடிக்கை குறித்து பொய் செய்திகளை வெளியிடுவது, நீதித்துறை மீது நம்பிக்கை வைத்திருக்கும் தீட்சிதர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்.

உயர் நீதிமன்றம்

ஆவணி மாதத்தில் மகா அபிஷேகம் உள்ளிட்ட மத ரீதியிலான பல வைபவங்கள் நடைபெற்று வருவதால், முடிந்தவரை கிடைத்த ஆவணங்களை 19-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். நீதிமன்ற உத்தரவுப்படி 5 ஆண்டுகளுக்கான பதிவேடுகளை அக்டோபர் 3-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கிறோம் என்று உறுதியளித்திருக்கிறோம். ஆனால் எந்தவித ஆதாரமுமின்றி 2,000 ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக, அரசு அபாண்டமான குற்றம்சுமத்தியிருக்கிறது. தீட்சிதர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் இப்படியான செயல்களை இந்து அறநிலையத்துறை மேற்கொண்டால், உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.