சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றியம் காரைக்குடி வட்டம், சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம், பழைய செஞ்சை. இங்கு மிகப்பெரிய பிரச்னை குடிநீர். அதிலும், குடிநீர் இல்லை என்பது அங்கு பிரச்னை இல்லை, இருக்கும் குடிநீரை குடித்தால் நோய் வருமளவுக்கு குடிநீர் அசுத்தமாக இருக்கிறது என்பதுதான் பிரச்னை. இத்தகைய அசுத்தமான குடிநீரைக் குடித்து பலர் தோல் நோய் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருவதாக, ஊர்மக்கள் கூறுகிறார்கள்.
குடிநீர் இவ்வளவு அசுத்தமாவதற்குக் காரணம் அந்த கிராமத்தில் அமைத்திருக்கும் `நாட்டார் கண்மாய்’ என்று ஒரு பெரிய கண்மாய்தான். அதாவது, அந்த கண்மாய்க்கு நடுவில் குடிநீருக்கென்று போடப்பட்ட போர் ஒன்று இருக்கிறது. காரைக்குடி மற்றும் காரைக்குடிக்கு அருகிலுள்ள கோவிலூர் என்ற ஊரிலிருந்து அனைத்து சாக்கடை கழிவுநீரும் இந்தக் கண்மாயில் தான் கலக்கப்படுகிறது. இந்த கண்மாய்க்கென்று 2 மடைகள் உள்ளன. ஒன்று திறந்து மூடும் வசதி இல்லாத கற்களாலான மடை. மற்றொன்று திறந்து மூடும் வசதி உள்ள மடை. இரண்டு மடைகளுக்கும் இடையே ஒரு பெரிய மேடு போன்ற அமைப்பு இருந்தது.
ஆனால் கடந்த 2020-ம் ஆண்டில் அரசு `மீன் குத்தகை’ என்ற பெயரில் அந்த மேட்டை வெட்டி ஆழப்படுத்த தண்ணீர் மட்டமும் அதிகரித்தது. அதேசமயம், தண்ணீர் வெளியேற முடியாத சூழலில் குடிநீருக்காகப் போடப்பட்ட போர்வெல்லுக்குள் அந்தத் தண்ணீர் செல்கிறது. மேலும், மீன் வளர்ப்பினால் அங்கு அதிக மீன் கழிவுகள் போன்றவை கண்மாயில் தேங்கி தண்ணீர் முழுவதும் அசுத்தமானது. ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் கண்மாய் நீரை குடிக்க முடியாமல் போனது. சிவகங்கை மீன்வளத்துறையில் மனு கொடுத்து கோரிக்கை எழுப்பிய பின்னர் அவர்கள், மீன் குத்தகையை அங்கிருந்து நீக்கினர்.
இருப்பினும், அதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆழம் அப்படியேதான் இருக்கிறது. இதனால், அதிகப்படியான தண்ணீர் தேங்குவதும், அவை போர்வெல்லுக்குள் இறங்குவதால் குடிநீர் அசுத்தமாவதும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. இது பற்றி, ஊராட்சி மன்றத் தலைவரிடத்தில் கிராம மக்கள் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. பழைய செஞ்சை மக்கள் கவலையில் ஆழ்ந்திருக்க, அரசு தரப்பிலிருந்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.