புதுடெல்லி: டெல்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் ஆதிஷி சனிக்கிழமை மாலை ராஜ் நிவாஸில் நடந்த விழாவில் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 5 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆதிஷியை நேற்று நியமித்ததைத் தொடர்ந்து இன்று அவர் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
அதிஷியுடன் அரவிந்த் கேஜ்ரிவால் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த கோபால் ராய், சவுரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், இம்ரான் ஹுஸ்ஸைன் மற்றும் முதல் முறை எம்எல்ஏவான முகேஷ் அஹல்வாட் ஆகிய 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் அதிஷி உட்பட அமைச்சர்கள் அனைவருக்கும் துணநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஆதிஷியை டெல்லி முதல்வராக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். அதேபோல், அரவிந்த் கேஜ்ரிவாலின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறையிலிருந்த கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்த அரவிந்த் கேஜ்ரிவால், செவ்வாய்க்கிழமை (செப்.17) தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து டெல்லி அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சரான ஆதிஷி ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
கல்காஜி எம்எல்ஏ-வான ஆதிஷி மர்லேனா, ஆம் ஆத்மி அரசில் அதிகபட்ச துறைகளை கவனித்து வந்தார். இந்த நிலையில் அவர் இன்று டெல்லியின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதன் மூலம் சுதந்திர இந்தியாவின் 17-வது பெண் முதல்வராகவும், டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வாராகவும் ஆகியிருக்கிறார் அதிஷி. என்றாலும் டெல்லி சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிற நிலையில், அவர் குறுகிய காலம் மட்டுமே முதல்வர் பதவியில் இருப்பார்.