சென்னை,
இந்தியா – வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி இதுவரை 308 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில், இந்திய அணியினர் பிறந்தது முதலே சொந்த மண்ணில் எஸ்.ஜி பந்துகளில் விளையாடுவதால் அவர்களுக்கு அது சாதகமாக உள்ளது எனவும், வங்காளதேச அணியினர் கூகபுரா பந்துகளில் விளையாடுவதால் தடுமாறுவதாகவும் வங்காளதேச வீரர் தஸ்கின் அகமது கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, பாகிஸ்தானில் நாங்கள் நன்றாக விளையாடியதால் வென்றோம். இந்தியாவில் சூழ்நிலைகள் சவாலாக இருக்கிறது. இந்தியா எஸ்ஜி பந்துகளால் அதிக சாதகத்தை பெறுகிறது. இந்திய வீரர்கள் சிறு வயது முதலே எஸ்.ஜி பந்துகளில் விளையாடுகின்றனர்.
எனவே எங்களை விட அந்தப் பந்துகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது இந்திய வீரர்களுக்கு நன்றாக தெரிகிறது. பேட்டிங்கில் நாங்கள் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் நன்றாக விளையாடினோம். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் தவறுகளை ஒப்புக்கொண்டனர். ஒருவேளை புதிய பந்தில் நாங்கள் நன்றாக விளையாடியிருந்தால் நிறைய விக்கெட்டுகளை இழந்திருக்க மாட்டோம். மிடில் ஆர்டருக்கு புதிய பந்தில் விளையாடுவது கடினமாக இருக்கிறது.
அதே சமயம் சொந்த மண்ணிலும், வெளிநாட்டிலும் இந்தியா வலுவான எதிரணி. அவர்கள் மற்றவர்களைப் போலவே சொந்த மண் சாதகத்தை எடுத்துக் கொள்கிறார்கள். பாகிஸ்தானில் எதிரணியும், சூழ்நிலைகளும் வித்தியாசமாக இருந்தது. இங்கே நாங்கள் நன்றாக பந்து வீசியிருக்க வேண்டும். ஆனால் நாங்கள் சராசரிக்கு நிகராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.