புதுடெல்லி: அண்டை நாடான மாலத்தீவுடன் இந்தியா சுமூக உறவில் இருந்தது. ஆனால், அங்கு அதிபராக முகமதுமுய்சு பதவியேற்றபின் சீனாவுடன் நெருங்கினார்.
பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து, மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் விமர்சித்தனர். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இப்பிரச்சினைகள் காரணமாக இந்தியா-மாலத்தீவு இடையேயான சுமூக உறவு பாதித்தது. இந்நிலையில் பிரதமர் மோடி 3-வது முறையாக கடந்த ஜூன் மாதம் பதவியேற்றபோது, அந்த விழாவில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கலந்து கொண்டார். அதன்பின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த மாதம் மாலத்தீவு சென்று இரு நாடுகள் இடையேயான தவறான புரிதலை சுமூகமாக்கினார். தற்போது மாலத்தீவு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. கரோனா பாதிப்புக்குப்பின் மாலத்தீவின் சுற்றுலா வருவாய் குறைந்தது. கடன் மதிப்பு 8 பில்லியன் டாலராக அதிகரித்தது.
மாலத்தீவுக்கு இந்தியா கடந்தாண்டு 50 மில்லியன் டாலர் அவசரகால நிதியுதவியாக வழங்கியிருந்தது. இந்நிலையில் அரசு செலவினங்களுக்காக இந்த நிதியுதவியை இந்தாண்டும் நீட்டிக்கும்படி மாலத்தீவு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து ஸ்டேட் பாங்க்ஆப் இந்தியா மூலம் வழங்கப்படும் 50 மில்லியன் டாலர் நிதியுதவியை மேலும் ஓர் ஆண்டுக்கு இந்தியா நீட்டித்துள்ளது.