புதுடெல்லி: திடக்கழிவு நிர்வாக முறையில் ஏற்பட்ட தோல்விக்காக பஞ்சாப் அரசுக்கு விதித்த ரூ.1,000 கோடி அபராதத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பஞ்சாப் மாநில அரசானது திடக்கழிவு நிர்வாக விதிகளைமுறையாகக் கடைப்பிடிக்காத தாலும், பல முறை எச்சரிக்கை விடுத்த நிலையில் முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினையான திடக்கழிவு நிர்வாகத்தில் தொடர்ந்து தோல்வி கண்டது. இதைத் தொடர்ந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) ரூ.1,000 கோடி அபராதத்தை பஞ்சாப் அரசுக்கு விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து பஞ்சாப் அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ.1,000 கோடி அபராதத்துக்கு தடை விதித்தனர். மேலும் திடக் கழிவு நிர்வாகத்தில் தோல்வி அடைந்தது தொடர்பாக ஏன் வழக்கு தொடரக்கூடாது என்று கேள்வி எழுப்பி பஞ்சாப் மாநிலதலைமைச் செயலர், சம்பந்தப்பட்டதுறை உயர் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். பஞ்சாப் மாநில அரசு சார்பில், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.