பீகாரில் நிலத் தகராறு காரணமாக மர்ம நபர்கள் சிலர் தலித் மக்களின் குடிசைகளுக்குத் தீ வைத்துள்ளனர். 21 குடிசைகள் முழுவதும் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம், நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் நவாடா மாவட்டத்திலுள்ள தோலா எனும் பகுதியில் கடந்த புதன்கிழமை மர்ம நபர்கள் சிலர் புகுந்து அங்குள்ள தலித் மக்களின் குடிசைகளுக்குத் தீ வைத்துள்ளனர். இதில் 21 குடிசைகள் முழுவதுமாகவும், 13 குடிசைகள் பகுதியளவும் தீக்கிரையாகி உள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் முதல் குற்றவாளியாக நந்தியா பஸ்வான் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்த 3 நாட்டு துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதப்பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்துப் பேசிய நவாடா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிநவ் திமான், “இங்கு வாழும் இரு சமூகத்தினருக்கு இடையே நிலவிய நிலத்தகராறுதான் இந்த கோர சம்பவத்துக்கு காரணம்” என்று கூறியுள்ளார். தங்களது நிலத்தில் அவர்கள் குடியிருந்ததாலேயே அவர்கள் வீட்டிற்கு தீ வைத்தோம் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் அபிநவ் திமான் கூறினார்.
நவாடா மாவடத்தில் ரவிதாஸ், மஞ்சி, பஸ்வான் ஆகிய மூன்று தலித் பிரிவினர் வாழ்ந்து வருகின்றனர் இதில் பஸ்வான் பிரிவினர் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். பஸ்வான் பிரிவினருக்கும் ரவிதாஸ், மஞ்சி பிரிவினருக்கும் இடையே நிலத்தின் உரிமை தொடர்பாக எழுந்த பிரச்னை, சில நாள்களுக்கு முன் மோதலாக வெடித்தது. இந்த மோதலில் தான் பெரும்பான்மையாக இருந்த பஸ்வான் பிரிவினர் பிற பிரிவினரின் குடிசைகளுக்கு கடந்த புதன்கிழமை தீ வைத்துள்ளனர். மேலும் அங்குள்ள 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரையும் ஆயதங்களைக் காட்டி மிரட்டியுள்ளனர். 21 வீடுகள் முழுதும் எரிந்து போயின. இருப்பிடம் இல்லாமலும் அச்சத்திலும் அங்குள்ள மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தால் நவாடா மாவட்டம் முழுவதையும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. ஏற்கெனவே நந்து பஸ்வான் தன் ஆட்களுடன் நேரில் வந்து இடத்தை காலி செய்யுமாறு மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பீகாரின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், “மோடி மற்றும் நிதிஷ் குமார் ஆட்சியில் பீகார் முழுவதும் பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. ஏழை மக்கள் குறித்து அவர்கள் யாரும் கவலைப்படவில்லை. தலித்துகள் மீது நடத்தப்படும் வன்முறைகளை பொறுத்து கொள்ள முடியாது” எனக் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தச் சம்பவத்தில் கைதான குற்றவாளிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு பதிலளித்த பீகார் பட்டியல் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜனக் ராம், “குற்றவாளிகள் யாராக இருந்தாலும் இந்த அரசு கண்டிப்பாக அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கும். முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியில் தலித்துகள் பாதுகாப்புடன் உள்ளனர்” என்றார்.
நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.