“மறுக்கப்பட்ட உரிமையை வழங்கவே சாதி சான்றிதழ் கேட்கப்படுகிறது” – கனிமொழி எம்.பி

திருச்சி: “சாதி சான்றிதழ் கேட்பது சாதியை தெரிந்து கொள்வதற்காக அல்ல; அவர்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை, உரிமையை வழங்கவே சாதி சான்றிதழ் கேட்கப்படுகிறது” என்று கனிமொழி எம்.பி கூறினார்.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திராவிடப் பள்ளி 5-ம் ஆண்டு தொடக்கவிழா நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி கலந்துகொண்டு, திராவிடப் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசியது: “இன்று மதவாத, சாதிய அரசியலை, பிரிவினைவாத அரசியலை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். பெண்கள் பல்வேறு தியாகங்கள் செய்ததால் தான் நாம் உயர்வடைந்துள்ளோம்.

மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை தமிழகத்தின் மீது திணிக்க கங்கனம் கட்டிக்கொண்டு செயலாற்றுகிறது. கல்வியில் தமிழகம் 30 ஆண்டுகள் முன்னோக்கியுள்ளது. ஒரே ஒரு மாணவன் இருந்தாலும் அந்த பள்ளியை நடத்தும் மாநிலம் தமிழ்நாடு. குக்கிராமத்தில் இருப்பவர்களுக்கு கூட கல்வி சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு செயல்படுகிறது. அதற்கு காரணம் திராவிடம். எந்த ஒரு காரணத்திற்காகவும் கல்வி கற்காமல் இருந்து விட கூடாது என செயல்பட்ட இயக்கம் திராவிட இயக்கம். சாதி சான்றிதழ் கேட்பது சாதியை தெரிந்து கொள்வதற்காக கேட்கப்படுவதில்லை. அவர்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை, உரிமையை வழங்கதான் சாதி சான்றிதழ் கேட்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறை நடக்கும்பொழுது மத்தியில் ஆளும் பாஜக பெண்கள் மீது தான் குற்றச்சாட்டை வைப்பார்கள். எந்த வித அடிப்படைவாதத்தாலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள் தான். உன்னுடைய உடையை, உனக்கு வசதியான உடையை நீ தீர்மானி. உடைகள் பெண்களுக்கு தடையாக இருக்க கூடாது என பெரியார் கூறினார். பெண்களுக்கு என தனித்துவமான ஆடைகள் உருவாக்குவதை விட்டுவிடுங்கள். பெண்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. கனவுகள், லட்சியங்கள் எதற்கும் எதுவும் தடையாக இருக்க கூடாது. பெண்ணுரிமையை எந்த வித தயக்கமுமின்றி பெரியார் பேசினார்.

சாதி போல் ஒரு பெரிய பொய் உலகில் இருக்க முடியாது. முதன் முதலில் ஆப்பிரிக்காவில் உருவான மனித இனம் 147 நாடுகளில் பரவியுள்ளது. அதற்கும் நமக்கும் மரபியல் தொடர்பு உள்ளது. இதில் எப்படி சாதி வந்தது. சித்தர் பாடல்களில் கூட சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு இருந்ததை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று நம்முடைய வழி கல்வி, அறிவு என்பது தான். இது தான் பெரியார் நமக்கு கற்று தந்தது.

திராவிடம் என்பது மிகப் பெரிய ஆற்றலாக மாறி இன்று பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. அம்பானி, அதானிக்கு தான் எல்லாமும் கிடைக்க வேண்டும் என பாஜக இருக்கிறது. ஆனால் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், எல்லாமும் சமம் என்பது திராவிடம். திராவிடம் என்பது மனித நேயம். இது தான் நம்முடைய சிந்தனை. நாம் போராடி பெற்ற உரிமைகள் உங்களிடம் இருக்கிறது. திராவிட இயக்கத்தின் கொள்கைகளை தாங்கி இருக்க வேண்டும்” என்றார் கனிமொழி எம்.பி.

இந்த நிகழ்ச்சியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் விளக்க உரையாற்றினார். இதில் திருச்சி திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர மேயர் அன்பழகன், எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார், தலைமை கொறடா கோவி செழியன், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.