மோர்சிங் கலைஞர் ஸ்ரீரங்கம் கண்ணன் காலமானார்: இசை உலகினர் இரங்கல்

சென்னை: பிரபல மோர்சிங் வாத்திய கலைஞர் ஸ்ரீரங்கம் கண்ணன் நேற்று காலமானார். அவருக்கு வயது 72.

கர்னாடக இசை மேடைகளில் பக்கவாத்தியமான மோர்சிங் வாசிப்பதில் பிரபலமாக விளங்கியவர் கண்ணன். ஸ்ரீரங்கத்தில் கடந்த1952 மே 5-ம் தேதி பிறந்தார். பிரபலவித்வான் புதுக்கோட்டை மகாதேவனிடம் தனது 19-வது வயதில் மோர்சிங் கற்கத் தொடங்கினார். மோர்சிங் மற்றும் மிருதங்க வித்வான் கானாடுகாத்தான் ராஜாராமன், மிருதங்க மேதை காரைக்குடி மணி ஆகியோரிடம் லய நுட்பங்கள், தாளக் கோர்வைகளை கற்றார். இசைத் துறை சாராத குடும்பத்தில் பிறந்த இவர், முதல்தலைமுறை கலைஞராக பிரகாசித்தார்.

கணிதத்தில் பட்டம் பெற்ற ஸ்ரீரங்கம் கண்ணன், வங்கி ஊழியராகவும் பணியாற்றி வந்தார். தனிஆவர்த்தனங்களில் அட்சரம் பிசகாமல் வாசிக்கக்கூடியவர். எம்.பாலமுரளி கிருஷ்ணா, மாண்டலின் ஸ்ரீனிவாஸ், புல்லாங்குழல் மேதை ரமணி உட்பட பல்வேறுமேதைகளுக்கு பக்கவாத்தியம் வாசித்துள்ளார். சக கலைஞர்களான மிருதங்க மேதைகள் டி.கே.மூர்த்தி, உமையாள்புரம் சிவராமன், பாலக்காடு ரகு ஆகியோருடன் இணைந்து வாசித்து அவர்களது பாராட்டையும் பெற்றவர். மலேசியாவில் தபேலா மேதை ஜாகிர் உசேனுடன் இணைந்து வாசித்துள்ளார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் ஸ்ரீரங்கம் கண்ணனை தனியாக அழைத்து மோர்சிங் வாசிக்குமாறு கூறிய மலேசிய மன்னர், அதில் இருந்து வெளிப்பட்ட ஒலியை கேட்டு நெகிழ்ந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் கலைமாமணி விருது, சிறந்த பக்கவாத்திய கலைஞருக்கான மியூசிக் அகாடமியின் ‘டாக்டர் ராமமூர்த்தி விருது’ (2 முறை), ஸ்ரீராகம் ஃபைன் ஆர்ட்ஸின் ‘மன்னார்குடி நடேச பிள்ளை விருது’ மற்றும் நாரத கான சபா, தியாக பிரம்ம கான சபா உட்பட பல சபாக்களின் விருதுகளை பெற்றவர். அகில இந்திய வானொலி நிலையத்தில் பல நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற பெருமைக்கு உரியவர். மோர்சிங் வாசிக்க இளைய தலைமுறையினர் ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவரது மறைவுக்கு இசை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.