புதுடெல்லி: ஏர் இந்தியா ஊழியர் கொலையில் தொடர்புடைய பெண் தாதாவை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் சூரஜ் மான் (30) என்ற ஏர் இந்தியா ஊழியர் டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கு குறித்து போலீஸார் தீவிரவிசாரணை நடத்தினர். அப்போது சூரஜ் மான் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், சிறையில் உள்ள அவருடைய சகோதரரரும் தாதாவுமான பர்வேஷ் மானின் குடும்பத்துக்கு அவ்வப்போது சூரஜ் மான் பண உதவிகள் செய்து வந்துள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து நொய்டா போலீஸ் கூடுதல் டிசிபி மணீஷ் குமார் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெல்லி செக்டார் 11-ல் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் (ஜிம்) பிரபல தாதா கபில் மானுக்கும் காஜல் கத்ரி என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன்பின்னர், தாதா கபில் மானின் தந்தையை பர்வேஷ் மான் ஆட்கள் கொலை செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் மண்டோலி சிறையில் பர்வேஷ் மான் இருப்பதால், அவரது குடும்பத்துக்கு சகோதரர் சூரஜ் மான் நிதியுதவி வழங்கி வந்துள்ளார். தந்தையின் கொலைக்கு பழி வாங்க சூரஜ் மானை கொல்ல கபில் மான் கும்பல் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், காஜல் கத்ரி ‘லேடி டான்’ என்ற அளவுக்கு வளர்ந்து அவரும் பல சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். சிறையில் தனது கணவர் கபில் மானை சந்தித்து, சூரஜ் மானை கொலை செய்வது குறித்து சதி திட்டம் தீட்டியுள்ளார் காஜல். பின்னர், நவீன் சர்மா என்பவரை கூலிப்படையாக நியமித்து ரூ.4 லட்சம் பேரம் பேசியுள்ளார் காஜல். ஆயுதம் வாங்க முன் பணமாக ரூ.1.5 லட்சம் வழங்கியுள்ளார். தலைமறைவான காஜலைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவரை கைது செய்து விட்டோம்.
உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வெளியில் வந்த சூரஜ் மானை நவீன் சர்மா உட்பட சிலர் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த வழக்கில்மேலும் சிலருடைய பெயர்கள் தெரிய வந்துள்ளன. அவர்களையும் கைது செய்து காஜல் கத்ரிமீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.