நேற்று திரையரங்குகளில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ், சுவஸ்விகா, சஞ்சனா, காளி வெங்கட், பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார்.
இரண்டு ஆண்களுக்கு இடையிலான ஈகோ மோதலுடன் கிரிக்கெட் களத்தில் பயணிக்கும் திரைப்படம் பெண்ணியம், சாதிய பாகுபாடுகள் எனச் சமூக கருத்துக்களையும் பேசி மக்களை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் லப்பர் பந்து படக்குழுவினரைச் சந்தித்துப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
“ரொம்ப நாள் கழிச்சு நான் பார்த்த ஒரு எண்டெர்னெயினிங் அண்ட் என்கேஜிங் திரைப்படம் லப்பர் பந்து. படத்தின் எழுத்தாளர், இயக்குநர், நடிகர்கள், ஒளிப்பதிவாளர் எல்லாரும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கின்றனர்.
நான் இந்த படம் பார்க்கும்போது, எனக்கு என்னுடைய ஊர்ல நாங்க கிரிக்கெட் டீம் வச்சு நடத்தியது, நாங்க சந்திச்ச மனிதர்கள் எல்லாரும் ஞாபகம் வந்தாங்க. நானுமே இந்த கதையில இருக்கிற ஒரு கதாபாத்திரம்தான்.
கதையில் இருக்கக்கூடிய விஷயங்கள் எல்லாருக்குமானதாக இருக்கிறது. சின்ன நகரில் வளர்ந்தவர்களுக்கும், கிரிக்கெட் பிரியர்களுக்கும் அதைத் தாண்டி குடும்ப விழுமியங்களைப் பேசும் படமாகவும் இருக்கிறது. நான் இந்த படத்தை ரொம்ப எஞ்சாய் பண்ணி பார்த்தேன்” எனப் பேசியுள்ளார் வெற்றிமாறன்.