லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா முக்கிய தளபதி பலி

ஜெருசலேம்,

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் இடங்களில் இஸ்ரேல் நேற்று நடத்திய துல்லிய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார். காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் இஸ்ரேல் ராணுவத்துக்கு, அண்டை நாடான லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் பெரும் தலைவலியாக இருக்கின்றனர்.

ஹமாசுக்கு ஆதரவாக தினந்தோறும் இஸ்ரேலை இந்த அமைப்பினர் தாக்கி வருகின்றனர். இதனால் இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் லெபனானில் பயன்பாட்டில் உள்ள பேஜர்கள் வெடித்து பெரும் சேதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என கருதப்படுகிறது.

பேஜர்களை வெடிக்கச் செய்ததற்கு பதிலடி தருவோம் என ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நசரல்லா அறிவித்திருந்தார்.அதன்படி வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று, 140 ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதில் பலவற்றை வானிலேயே இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே சமயம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் அதிகம் உள்ள இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா படையின் ராட்வான் பிரிவின் முக்கிய தளபதி இப்ராஹிம் அகில் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.