சென்னை: சென்னை வியாசர்பாடி மாநகராட்சி பள்ளியைச் சுற்றிலும் புகையிலைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இதுகுறித்து அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளியில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் இல்லாதது குறித்தும், ஆய்வகம் பராமரிப்பு இல்லாமல் இருப்பது குறித்தும், பள்ளியைச் சுற்றிலும் புகையிலைப் பொருட்கள் தடையின்றி விற்கப்படுவது குறித்தும் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப்.21) விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு ப்ளீடர் ஏ.எட்வின் பிரபாகர், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் எஸ்.குமரேசன், மாநகராட்சி வழக்கறிஞர் அஸ்வினி தேவி உள்ளிட்டோர் ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “வியாசர்பாடி கல்யாணபுரம் மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், ஆய்வக வசதிகளை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன?
பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, என்று கேள்வி எழுப்பினர். மேலும், இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளும் இருவாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.