இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் பிரதர் (Brother).
நட்டி நடராஜன், பூமிகா, விடிவி கணேஷ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்கீரின் சீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, “நீங்க கொடுக்கிற எனர்ஜிலதான் வண்டி ஓடிட்டு இருக்குது. என்னுடைய முதல் படத்துக்கு என்ன எனர்ஜி கொடுத்தீங்களோ அதே எனர்ஜிய என்னோட கடைசி படம் வரைக்கும் கொடுப்பீங்கனு நம்புறேன்.
ரொம்ப நாள் கழிச்சு உங்கள சந்தித்ததுல ரொம்ப மகிழ்ச்சி. எப்பவும் உங்கள சந்தோஷப்படுத்துறதுதான் என்னுடைய வேலை. உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. இந்தப் படத்துக்கு பிரதர்னு நான்தான் டைட்டில் கொடுத்தேன். அக்காவுக்கும், தம்பிக்குமான ஒரு அழகான கதைதான் இந்தப் படம். பூமிகாதான் அக்காவா நடிச்சிருக்காங்க. எப்போதும் அவுங்க முகத்துல ஒரு அழகு, புன்னகை இருக்கும். இந்த படத்துல ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க.
ஷூட்டிங் ஸ்பாட்ல நிறைய பேசிப்போம். நிறைய விஷயங்களை அவங்க மூலமாக தெரிஞ்சுகிட்டேன். பிரியங்கா மோகனும் ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. இந்தப் படத்துக்கான கதைய ராஜேஷ் சார் வந்து சொன்னாரு. ஒரு ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் மூவியா இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னேன். அதற்கான வேலைகள செஞ்சிட்டு வந்து சொன்னப்போ எனக்கு ஒரு நம்பிக்கை வந்துச்சு.
அவரை எல்லாரும் ஒரு காமெடி படம் எடுக்குற டைரக்டர்னு நினைச்சிட்டு இருக்கோம். ஆனா அவர் அப்படி கிடையாது அவர் படத்துல ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவ்ளோ அழகா காமிச்சிருப்பாரு. இந்த மாதிரி நிறைய படங்கள் ராஜேஷ் சார் பண்ணனும். இந்தப் படம் வெற்றி பெறும்னு எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.