IND vs BAN: பாகிஸ்தானுக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று பாகிஸ்தான் மண்ணிலேயே வெற்றி வாகை சூடிய வங்கதேசம் அணி, அதே உத்வேகத்துடன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கு முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் வங்கதேச அணி மோத உள்ளது.
இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப். 19ஆம் தேதி அன்று தொடங்கியது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷாண்டோ முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்ஸ்லில் ரோஹித், சுப்மான் கில், விராட் கோலி உள்ளிட்டோர் தொடக்கத்திலேயே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ரிஷப் பண்ட் ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சற்று பலமான நிலைக்கு கொண்டு வந்தது.
515 ரன்கள் இலக்கு
ரிஷப் பண்ட் அரைசதத்தை தவறவிட்டும், ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்த பின்னரும் ஆட்டமிழக்க அடுத்த ஓவரிலேயே கேஎல் ராகுலும் துரதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தார். அப்போதுதான் ஜடேஜா – அஸ்வின் பார்ட்னர்ஷிப் அமைந்து சுமார் 150 ரன்களுக்கு மேல் போனது. இதில் அஸ்வின் சதம் அடிக்க, ஜடேஜா 86 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், இந்தியா 376 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது, ஹசன் மகமுத் 5 விக்கெட்டுகளையும், டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும், மெஹிதி ஹசான் மற்றும் நிகாத் ராணா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடர்ந்து, வங்கேதச அணியை இந்தியா 149 ரன்களுக்கே சுருட்டியது. வெறும் 47.1 ஓவருக்குதான் வங்கதேசம் பேட்டிங்கும் பிடித்தது. இந்திய அணி பந்துவீச்சில் பும்ரா 4, ஆகாஷ் தீப், ஜடேஜா, சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அஸ்வின் மட்டும் விக்கெட் எடுக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் 226 ரன்கள் என்ற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு இம்முறை ரோஹித், ஜெய்ஸ்வால், கோலி ஆகிய மூவரும் ஏமாற்றம் அளித்தனர்.
அஸ்வின் 3 விக்கெட்டுகள்
ஆனால், ரிஷப் பண்ட் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் இன்று சதம் விளாசி அசத்தினர். மதிய உணவு இடைவேளைக்கு சில ஓவர்கள் பேட்டிங் செய்த பின்னர் இந்தியா டிக்ளர் செய்தது. அதன்படி 515 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜாகிர் ஹாசன் – ஷாத்மான் இஸ்லாம் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச ஓப்பனர்கள் அதிக ரன்களை அடித்த பார்ட்னர்ஷிப் இதுதான். தேநீர் இடைவேளை வரை விக்கெட் இல்லாமல் இருந்த வங்கதேசத்திற்கு, அதன்பின்னர் ஜாகிர் ஹாசன், ஷாத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர், இதில் ஜாகிர் ஹாசன் விக்கெட்டுகளை தவிர மூன்று விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றினார்.
கேப்டன் ஷாண்டோ அரைசதம் அடித்து களத்தில் உள்ளார். வங்கதேசம் 357 ரன்கள் பின்னிலை உள்ளது, கையில் 6 விக்கெட்டுகளே உள்ளது. அப்படி பிடித்து வந்த நேரத்தில் மழை மேகங்கள் அதிக தென்பட்டதால், வெளிச்சம் சுத்தமாக இல்லையென்பதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி தரப்பில் இரண்டாவது இன்னிங்ஸில் 38வது ஓவரை சிராஜ் வீச தொடங்கியிருந்தார். முதலில் 2 பந்துகள் வீசப்பட்டு மூன்றாவது பந்துக்கு சிராஜை கள நடுவர் ராட் டக்கர் தடுக்கிறார். மேலும் போதிய வெளிச்சம் இல்லை என்கிறார்.
சிராஜ் வீச வந்த ஸ்பின்
உடனே, ரோஹித் சர்மா, ‘அப்படியென்றால் நாங்கள் சுழல்பந்துவீச்சை வீசலாமா’ என நடுவர்களிடம் கேள்வி எழுப்பினார். சிராஜ் ஒரு பக்கம் ஸ்பின் போடுவதற்கு தயாராகிவிட்டார். ஒரு ஆஃப் ஸ்பின் போட தயாரான சிராஜை ரோஹித் தடுத்தார். போட்டி தடைசெய்யப்பட்டது, பின்பு மூன்றாம் நாள் ஆட்டம் சுமார் 45 நிமிடங்கள் முன்னாடியே போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் நிறுத்தப்பட்டது. ஒருவேளை ரோஹித் அனுமதி அளித்திருந்தால் சிராஜ் சுழற்பந்து வீசுவதை பார்த்திருப்போம் என்கின்றனர் ரசிகர்கள்.
pic.twitter.com/e2sbE5YRH4
— The Game Changer (@TheGame_26) September 21, 2024