Makkamishi: “மக்காமிஷி பாடல் உருவானது இப்படிதான்"- ஹாரிஸ் ஜெயராஜ்

மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற பிரதர் படத்தின் ‘மக்காமிஷி’ பாடல் குறித்து ஹாரிஸ் ஜெயராஜ் சில விஷங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் பிரதர் (Brother). பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்கீரின் சீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மக்காமிஷி’ பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

Brother movie

அதில் பேசிய ஹாரிஸ் ஜெயராஜ், ” ‘மக்காமிஷி’ பாடல் 100 சதவிகிதம் வெற்றி அடையும் என்று எனக்குத் தெரியும். ஒன்றரை வருடங்களுக்கு முன்பே இந்தப் பாடலை நான் ரெக்கார்ட் செய்துவிட்டேன். ஆனால் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்திற்கு இந்தப் பாடல் சரியாக பொருந்திருக்கிறது. ஆடியன்ஸை தியேட்டருக்கு எப்படியாவது வரவழைக்க வேண்டும். பாட்டுக்காகத்தான் ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருகிறார்கள். அதன் பிறகுதான் அதனை நல்ல படமா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கிறார்கள். அதனால் அதற்கேற்றவாறு பாடலை இசையமைக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இந்தப் படத்தில் பாடல்களைப் பாடிய அனைத்து பாடகர்களுக்கும் நன்றி. அதுமட்டுமின்றி 3 புதிய சிங்கர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். அதில் ஒருவர்தான் ‘மக்காமிஷி’ பாடலை பாடிய பால் டப்பா அனிஷ். ‘மக்காமிஷி’ பாடலை யாரை பாட வைப்பது என்று தேடிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு சிங்கர் பாடிய பாடலின் யூடியூப் லிங்கை எனக்கு ஒருவர் அனுப்பினார். அந்தப் பாடலைக் கேட்டேன். அவரின் குரல் இந்தப் பாடலுக்கு சரியாக இருக்காது என்று நினைத்துக்கொண்டிருந்தபோது யூடியூப் எனக்கு அடுத்தப் பாடலை பரிந்துரை செய்தது.

ஹாரிஸ் ஜெயராஜ்

அப்படி நான் கேட்டதுதான் பால் டப்பாவின் பாடல். அவருடைய குரல் எனக்கு பிடித்திருந்தது. அதனால் அவரையே தேர்வு செய்துவிட்டேன். யூடியூப்தான் எனக்கு அவரை அறிமுகப்படுத்தியது. ராஜேசும், அவரும் இணைந்துதான் இந்த ‘மக்காமிஷி’ என்ற வார்த்தையை எழுதினார்கள். ஒரு சிஎஸ்கே ஆந்தம் (Anthem) மாதிரி எனக்கு இந்தப் பாடல் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கேற்றவாறு இந்தப் பாடல் அமைந்துவிட்டது” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவியும், ஹாரிஸ் ஜெயராஜும் இணைந்து ‘மக்காமிஷி’ பாடலுக்கு ஆடிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.