2024ம் ஆண்டின் இரண்டாம் பகுதியும் வேக வேகமாக நகர்வதால், தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அரை டஜன் படங்கள் வெளியாகின்றன. நேற்று ‘லப்பர் பந்து’, ‘கடைசி உலகப்போர்’, ‘நந்தன்’ ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ உள்பட பல படங்கள் வெளியாகின. வரும் வெள்ளியன்று அதாவது செப்டம்பர் 27ம் தேதி கார்த்தி, பிரபுதேவா, விஜய் ஆண்டனி, ஜூனியர் என்.டி.ஆர். எனப் பலரின் படங்கள் வெளியாகின்றன. இது குறித்த ஒரு மினி பார்வை இனி..
‘மெய்யழகன்’
விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ படத்தை இயக்கியவர் பிரேம்குமார். சில வருட இடைவெளிக்கு பின், இப்போது கார்த்தி, அரவிந்த்சாமியை வைத்து ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். தஞ்சாவூர் பக்கம் நீடாமங்கலத்தில் நடக்கிற கதை. இரண்டு பேருக்கு (கார்த்தி, அரவிந்த்சாமி) இடையில் நடக்கிற உரையாடல், மனமாற்றம்தான் படம். இதில் ராஜ்கிரண், ஶ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ரேச்சல், இளவரசு எனப் பலரும் நடித்துள்ளனர். ’96’ கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
‘பேட்ட ராப்’
பிரபுதேவா, வேதிகா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ‘பேட்ட ராப்’. சினிமாவில் ஹீரோவாக துடிக்கும் ஒரு இளைஞனாக பிரபுதேவா, பாப் பாடகியாக வேண்டும் எனத் துடிக்கும் பெண்ணாக வேதிகா. இருவரின் கனவுகளும் நனவாகியதா என்பதுதான் ‘பேட்ட ராப்’ படத்தின் கதை. எஸ்.ஜே.சினு இயக்கியிருக்கிறார்.
முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடித்துள்ளார். தவிர விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் எனப் பலரும் உள்ளனர்.
‘ஹிட்லர்’
‘படைவீரன்’ படத்தை இயக்கிய தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ‘சீறு’ ரியா சுமன். சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, கௌதம்மேனன் நடித்திருக்கும் படம் ‘ஹிட்லர்’. ”பவர் என்பது அதிகாரத்தாலோ, பணத்தாலோ வருவதல்ல. உண்மையான பவர் என்பது தனக்குப் பின்னாடி எத்தனை பேர் நிற்கிறாங்க என்பதில் இருக்கு.” என்பதை சொல்லும் படமிது. விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார்.
‘தேவரா’
ஜூனியர் என்.டி.ஆர். கொரடாலா சிவா இயக்கத்தில் பான் இண்டியா படமாக உருவாகியிருக்கும் படம் ‘தேவரா’ பார்ட் 1. ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தெலுங்கு படவுலகில் ஹீரோயினாக அடியெடுத்து வைக்கும் படம் இது. டபுள் ஆக்ஷனில் வெளுத்து வாங்கியிருக்கிறாராம் ஜூனியர் என்.டி.ஆர். கடல் பின்னணியில் நடக்கும் கதை இது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் சையிஃப் அலிகான், பிரகாஷ்ராஜ், ஶ்ரீகாந்த், கலையரசன், முரளி ஷர்மா, நரேன் எனப் பலரும் நடித்துள்ளனர்.
இவை தவிர ஒரு சில சின்ன பட்ஜெட் படங்களும் வெளியாகும் என்கின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…