கொளப்பாக்கம்: குன்றத்தூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவி ஒருவர் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு 800 கிலோ சிறு தானியங்களை கொண்டு 12 மணி நேரத்தில் 600 சதுர அடியில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வரைந்து உலக சாதனை புரிந்தார்.
இந்த ஓவியத்தை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று நேரில் பார்த்து ரசித்தார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில்:
“ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த நாட்டிற்கு காலத்தின் கட்டாயம். இதற்காக பெரிய அளவில் கமிட்டி அமைக்கப்பட்டு கருத்து கேட்டு அதன் அடிப்படையில் வரலாற்று சிறப்புமிக்க அறிக்கை தந்துள்ளார்கள். மறைந்த முதல்வர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியத்தை உணர்த்தி இருக்கிறார்.
முதல்வரையும், துணை முதல்வராக வர துடித்து கொண்டிருக்கிற உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எஸ்சி, எஸ்டி விடுதியை பார்க்க வேண்டும். அடிப்படை வசதிகள் எதுவுமே கிடையாது. தமிழர் ஒருவர் நாட்டை ஆள வேண்டும் என்பது வரவேற்கக் கூடியது. பெரிய தேசம் யார் வேண்டுமானாலும் ஆளலாம்.
பல்வேறு சூழ்நிலை காரணமாக மீனவர்கள் எல்லை தாண்டி போகிறார்கள். பிரதமர் மோடி வந்த பிறகு துப்பாக்கி சூடு சம்பவம் ஏதும் இல்லை. மீனவர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வருகிறோம்.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை, ஈவேராவிற்கு மாலை செலுத்தினார். விஜய் பொதுவான நபராக இருப்பாரா என்பது கேள்விக்குறி. அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றால் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து சொல்லக்கூடிய தலைவராக இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு அரசியல் கட்சியை நிர்வகிக்க முடியும். அவர் அனைத்து தரப்பு மக்களையும் சமமாக பாவிப்பது கேள்விக்குறியே” என தெரிவித்தார்.