புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியாவில் வசிக்கும் சீக்கியர்கள் தங்கள் மத அடையாளமான தலைப்பாகை அணிவதற்கே போராட வேண்டி உள்ளது. இந்த பிரச்சினை அனைத்து மதத்தினருக்கும் உள்ளது” என்றார்.
இவரது இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். சீக்கியர்கள் குறித்த கருத்தைராகுல் திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “அமெரிக்காவில் நான் கூறிய கருத்து தொடர்பாக பாஜகவினர் பொய்யை பரப்பி வருகின்றனர்.
அமெரி்க்காவில் நான் பேசியதில் தவறு இருக்கிறதா என இந்தியா மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் சீக்கிய சகோதர, சகோதரிகளிடம் கேட்கிறேன். ஒவ்வொரு சீக்கியரும் ஒவ்வொரு இந்தியரும் தங்கள் மத நடைமுறைகளை அச்சமின்றி சுதந்திரமாக பின்பற்றக்கூடிய நாடாக இந்தியா இருக்க வேண்டாமா என உங்களிடம் கேட்கிறேன். நான் உண்மையைப் பேசிவிட்டதால் பாஜகவினரால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, என்னை மவுனமாக்க விரும்புகிறார்கள். ஆனால்நான் எப்போதும் குரல் கொடுப்பேன்” என பதிவிட்டுள்ளார்.