திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரண்ராஜ் மற்றும் ராஜேஷ். முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இதில் சரண்ராஜின் நண்பர்தான் இந்த மணிகண்டன்.
இந்த நிலையில், நேற்று இரவு நண்பனைச் சந்திப்பதற்காக சரண்ராஜ் பைக்கில் சென்றார். தன்னுடன் ராஜேஷையும் அழைத்துச் சென்றார் சரண்ராஜ். பிறகு மூன்று பேரும் ஒரே பைக்கில் சேவூர் பைபாஸ் சாலையிலுள்ள டீக்கடைக்கு வந்துள்ளனர். இரவு 11.30 மணிக்குக் கடைப் பகுதியிலிருந்து கிளம்பியுள்ளனர். நண்பன் சரண்ராஜை அவரது வீட்டில் கொண்டு சென்று விடுவதற்காக பைக்கை வேகமாக ஓட்டியுள்ளனர்.
முள்ளிப்பட்டு பகுதி அருகே பைபாஸ் சாலையில் சென்றபோது, அதிவேகமாக எதிரே வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் திடீரென பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. பைக்கில் சென்ற இளைஞர்கள் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஆரணி காவல்துறை, மூன்று உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தைக் கண்டுபிடிக்க சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் விபத்து ஏற்படுத்திய வாகனம் லாரி எனத் தெரியவந்திருக்கிறது. இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.