டெலாவர்: உக்ரைனில் நடைபெற்று வரும் போரும், காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலும் மிகவும் கவலை அளிப்பதாக அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட்-ன் உச்சிமாநாடு அமெரிக்காவின் வில்மிங்டன் நகரில் நடைபெற்றது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ், ஜப்பான் பிரதமர் கிஷிடா ஃபியூமியோ ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல், இந்தோ-பசுபிக் கடல் பிராந்திய பாதுகாப்பு, உலக சுகாதார பாதுகாப்பு, தொற்றுநோய் தயார்நிலை, தரமான உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நான்கு தலைவர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில், “உக்ரைனில் நடைபெற்று வரும் போர் காரணமாக, பயங்கரமான மற்றும் துயரமான மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நாங்கள் எங்களின் ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து நாடுகளும், பிற நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை அல்லது சுதந்திரத்துக்கு எதிரான அச்சுறுத்தல்களை தவிர்க்க வேண்டும். இந்தப் போரின் சூழலில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது அல்லது அச்சுறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேபோல், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய அக்டோபர் 7 தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்; முன்பும் கண்டித்திருக்கிறோம். அதேநேரத்தில் காசாவில் நடந்து வரும் படுகொலைகள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பிணையக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் காஸாவில் உடனடி மற்றும் நீடித்த போர் நிறுத்ததுக்கு வழிவகுக்கும். சர்வதேச மனிதாபிமான சட்டம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களுக்கு இணங்குமாறு அனைத்து தரப்பினர்களையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
பொதுமக்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் விரைவான கிடைப்பதற்கு சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனைத்து தரப்பினரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். காஸாவின் எதிர்கால மீட்சிக்கும், புனரமைப்புக்கும் சர்வதேச சமூகத்தின் ஆதரவு இருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் நீதியான, நீடித்த பாதுகாப்பான அமைதியுடன் வாழ உதவும் இரு நாடுகளுக்கான தீர்வுகளின் ஒரு பகுதியாக, இஸ்ரேலின் நியாயமான கவலைகளை கணக்கில் கொண்டு, ஒரு சுதந்திரமான, சாத்தியமான இறையாண்மை கொண்ட பாலஸ்தீனம் நாடு குறித்து நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவுபடுத்துதல் மற்றும் அனைத்து தரப்பிலும் வன்முறை, தீவிரவாதம் உள்ளிட்ட இரண்டு நாடுகளின் தீர்வு முயற்சிகளை குறைக்கும் எந்த ஒருதலைபட்சமான நடவடிக்கையும் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். மோதல்கள் தீவிரமடைவதையும், பிராந்தியங்களுக்கு பரவுவதை தடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.