காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்

புவனேஸ்வர்,

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் ராணுவ அதிகாரி, அவருடைய வருங்கால மனைவியுடன், கடந்த 14-ந்தேதி இரவில் காரில் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் மீது புகாரளிக்க பரத்பூர் காவல் நிலையத்திற்கு இருவரும் சென்றனர். அப்போது, ராணுவ அதிகாரி மற்றும் அவருடைய வருங்கால மனைவியை காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதுடன், அந்த பெண்ணிடம் போலீசார் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளனர் என்ற பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன்பேரில் ஒடிசா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவத்தில், காவல் ஆய்வாளர் உள்பட 5 காவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில், ஒடிசாவின் முன்னாள் முதல்-மந்திரியான, பிஜு ஜனதா தள கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக், அக்கட்சியின் தலைமையத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஒடிசாவின் கேந்திரப்பாரா மற்றும் கஜபதி ஆகிய மாவட்டங்களில் இருந்து தலைவர்கள் வந்திருந்தனர்.

இந்த கூட்டத்தில் பேசிய நவீன் பட்நாயக், காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. கவர்னர் மாளிகையில் அரசு ஊழியர்கள் தாக்கப்படுகின்றனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்பதுபோல் தெரிகிறது என்று அவர் கவலை தெரிவித்து உள்ளார்.

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் பரத்பூர் காவல் நிலையத்தில் ராணுவ அதிகாரி மற்றும் அவருடைய வருங்கால மனைவி மீது தாக்குதல் மற்றும் அந்த பெண்ணிடம் போலீசார் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டை குறிப்பிட்டு, அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று, பணியில் இருந்த அரசு ஊழியர் ஒருவரை கவர்னரின் மகன் உடல்ரீதியாக தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவம் பற்றியும் நவீன் பட்நாயக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.