புதுடெல்லி: டெல்லியின் புதிய முதல்வராக ஆதிஷி சிங் மர்லேனா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சவுரவ் பரத்வாஜ் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
டெல்லி மாநில மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான முறைகேடு வழக்கில் திஹார் சிறையில் 155 நாட்களாக இருந்த முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார்.
இதையடுத்து நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் பேசும்போது, “முதல்வர் பதவியை 2 நாட்களில் ராஜினாமா செய்வேன். மக்கள் எனக்கு மீண்டும் வாக்களித்த பிறகு மீண்டும் அப்பதவியில் அமர்வேன்’’ என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூடி விவாதித்தது. முன்னதாக, “அர்விந்த் கேஜ்ரிவாலைப் போலவே நானும் மக்கள் மன்றத்திடம் போக இருக்கிறேன். தேர்தலில் மக்கள் என் நேர்மையை அங்கீகரித்தால், மீண்டும் நான் பதவியில் அமர்வேன்” என்று மணீஷ் சிசோடியா தெரிவித் திருந்தார்.
அதன் பின்னர் ஆதிஷியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. பின்னர் முதல்வர் பதவிக்கு ஒருமனதாக அவரது பெயர் அறிவிக்கப் பட்டது.
இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய முதல்வராக கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ஆதிஷி சிங் மர்லேனா, முறைப்படி தேர்வு செய்யப் பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்கிழமை அர்விந்த் கேஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைக்க ஆதிஷி உரிமை கோரினார்.
இதையடுத்து முதல்வராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு டெல்லி முதல்வராக ஆதிஷி சிங் மர்லேனா பதவியேற்றார். டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் இதற்கான விழா நடைபெற்றது. அவருக்கு துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
முதல்வர் ஆதிஷியுடன், 5 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சர்களாக சவுரவ் பரத்வாஜ், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் ஹுசைன், முகேஷ் அஹ்லாவத் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். டெல்லியில் தொடர்ந்து 4-வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.
இளம் வயது முதல்வர்: தற்போது முதல்வராகப் பதவியேற்றுள்ள ஆதிஷி டெல்லியின் இளம் வயது முதல்வர் ஆவார். அவரது வயது 43 ஆகும். மேலும், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜியை தொடர்ந்து, நாட்டின் தற்போதைய இரண்டாவது பெண் முதல்வராகவும் ஆதிஷி தேர்வாகியுள்ளார்.
3-வது பெண் முதல்வர்: மேலும் டெல்லியின் 3-வது பெண் முதல்வர் என்ற பெருமையையும் ஆதிஷி பெற்றுள்ளார். டெல்லி முதல்வராக ஏற்கெனவே, பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித் ஆகியோர் பதவி வகித்திருந்தனர். அவர்களுக்குப் பிறகு டெல்லியின் 3-வது பெண் முதல்வராக ஆதிஷி பதவியேற்றுள்ளார்.
இதுவரை முதல்வர் பதவியேற்றவர்களில் 2-வது இளம் வயது பெண் முதல்வர் என்ற பெருமையை ஆதிஷி பெற்றார். 39 வயதில் உ.பி. முதல்வர் பதவியை ஏற்று மாயாவதி சாதனை படைத்திருந்தார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ளது. எனவே, வரும் பிப்ரவரி மாதம் வரை ஆதிஷி சிங் மர்லேனா தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சிப் பொறுப் பில் இருக்கும்.