டெஸ்ட் கிரிக்கெட்; அனில் கும்ப்ளேவின் தனித்துவமான சாதனையை உடைத்த அஸ்வின்

சென்னை,

இந்தியா – வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது.

இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா தனது 2வது இன்னிங்சில் 64 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில் சுப்மன் கில் 119 ரன் (நாட் அவுட்), ரிஷப் பண்ட் 109 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேசம் 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் அடித்துள்ளது. ஷாண்டோ 51 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

வங்காளதேசம் வெற்றி பெற இன்னும் 357 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில் இந்தியா வெற்றி பெற 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பக்கமே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அஸ்வின் வங்காளதேசத்தின் 2வது இன்னிங்சின் (இந்த போட்டியின் 4வது இன்னிங்ஸ்) போது 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அனில் கும்ப்ளேவின் தனித்துவமான சாதனையை முறியடித்துள்ளார். அதாவது, இதுவரை விளையாடிய 101 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 35 முறை 4வது இன்னிங்ஸில் விளையாடி 96 விக்கெட்டுகளை 19.4 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

இதன் வாயிலாக டெஸ்ட் போட்டிகளில் 4வது இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் தனித்துவமான சாதனையை அஸ்வின் உடைத்துள்ளார். இதற்கு முன் அனில் கும்ப்ளே தம்முடைய கேரியரில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 4வது இன்னிங்ஸில் 94 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

மேலும், டெஸ்ட் கேரியரில் மொத்தமாக அஸ்வின் இதுவரை 519* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த 8வது வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கோர்ட்னி வால்ஷ் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். இப்போட்டியில் மேலும் 1 விக்கெட் எடுத்தால் கோர்ட்னி வால்ஷ்-ன் சாதனயை அஸ்வின் முறியடிப்பார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.