திருநீர்மலை: திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளத்தில் உழவாரப்பணி நடைபெற்றது. இதில் ஒரு டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
திருநீர்மலை ரங்கநாத பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இந்த கோயிலில், பெருமாள் நான்கு கோலங்களில் காட்சி அளிக்கிறார். இந்தக் கோயிலின் எதிரிலுள்ள புஷ்கரிணியில் (குளம்) சித்த தீர்த்தம், சொர்ண தீர்த்தம், காருண்ய தீர்த்தம், க்ஷீர தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் சங்கமித்துள்ளன. இந்த குளம் முறையாக பராமரிக்கப்படாமல் புதர் வளர்ந்து, மோசமான நிலையில் இருந்ததால், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி விட்டது. குப்பை கழிவுகளால் குளம் மாசடைந்து காணப்பட்டது.
கோயிலுக்கு வரும் பக்தர்களிடையே கடும் இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் திருநாவுக்கரசர் உழவரப்பணி நற்பணி சங்கத்தின் சார்பில், இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளத்தில் உழவார பணிகள் நடந்தன.
இதில், 40க்கும் மேற்பட்டோர், உழவாரப் பணிகளை மேற்கொண்டனர். கோயில் படிக்கட்டுகளில் வளர்ந்திருந்த தேவையற்ற செடி, கொடிகளை அகற்றினர். மேலும் திருக்குளத்தில் இருந்த குப்பைகளை அகற்றினர். அதிகளவில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களை அகற்றினர்.
இதுகுறித்து அமைப்பின் தலைவர் முருகன் தெரிவித்ததாவது: திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளத்தில் இருந்த பிளாஸ்டி குப்பைக் கழிவுகள், செடி, கொடிகள் ஆகியவற்றை அகற்றி தூய்மைப்படுத்தி உள்ளோம். சுமார் 1 டன் குப்பை கழிவுகளை அகற்றினோம். கோயில் நிர்வாகம் இந்த பணிக்கு நல்ல முறையில் உதவி செய்தனர். கடந்த ஓர் ஆண்டுக்கு மேல் 36 கோயில்களில் உழவரப்பணி மேற்கொண்டுள்ளோம். மாதத்தில் இரண்டு நாட்களில் இந்த பணியை மேற்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.