திருமலை: லட்டு பிரசாதம் மட்டுமல்ல சுவாமிக்கு படைக்கும் நைவேத்தியத்திலும் கலப்பட நெய்தான் உபயோதித்தனர். இதனை அறிந்தநான் ஜெகன் ஆட்சியில் உள்ள அறங்காவலர் குழுவினரிடம் முன்பே எச்சரித்தேன். ஆனால், யாருமே கேட்கவில்லை என முன்னாள் தேவஸ்தான பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் கூறி உள்ளார்.
லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பா என பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் திருமலையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமலையில் தயாரிக்கப்படும் பிரசாதங்களின் தரம் குறைந்து விட்டது குறித்து நான் பல முறை முன்னாள் அறங்காவலர்களிடம் எடுத்துக் கூறினேன். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. புனிதமான பசு நெய்யில்கலப்படம் செய்வதோடு, அதனை பெருமாளுக்கு நைவேத்தியம் படைப்பது, லட்டு பிரசாதம் செய்து அதனை பக்தர்களுக்கு விநியோகம் செய்தது மகா பாவ செயலாகும்.
ஏழுமலையானின் தரமற்ற பிரசாதங்கள் குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு முந்தைய ஆட்சியின் போது நான் பல முறை எடுத்துக் கூறினேன். பலன் இல்லை. என்னுடையது தனிப்பட்ட நபரின் போராட்டம். சக அர்ச்சகர்கள் தனிப்பட்ட காரணங்களால் இதனை எடுத்துக்கூற முன் வரவில்லை. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்த மகா பாவம் அரங்கேறியது.
பரிசோதனை அறிக்கையை பார்த்தேன். புனிதமான பசு நெய்யில் விலங்குகளின் கொழுப்பை கலப்பதா? முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தேவஸ்தானத்தில் சில ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன். மீண்டும் கர்நாடக மாநிலத்தின் நந்தினி நெய்யை கொண்டு வந்ததை வரவேற்கிறேன். இவ்வாறு ரமண தீட்சிதர் கூறினார்.