புதுச்சேரி: புதுச்சேரியில், ‘பாரத் சக்தி பாண்டி இலக்கியத் திருவிழா 2024’ கடந்த 21-ம் தேதி தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆ.என். ரவி தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெற்று வந்த இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
முன்னதாக விஞ்ஞானி மற்றும் அரசியல் விமர்சகர் ஆனந்த் ரங்கநாதன் வரவேற்று பேசினார். அப்போது அவர், “விழா முடிவதற்குள் அனைவரும் வரியை கட்டிவிடுங்கள்” என நகைச்சுவையாக குறிப்பிட்டார். அதன்பிறகு பேச தொடங்கிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், “வரி தொடர்பாக என்னிடம் இன்னும் 7 நாட்களுக்கு பேசாதீர்கள். இல்லை என்றால் என்னிடம் மன்னிப்பு கேட்டதாக தோற்றத்தை உருவாக்கி விடுவார்கள்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது, “நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் சமூக சூழல் நன்றாக அமைய வேண்டும். நமக்கு அனுபவம் வாய்ந்த பிரதமர் கிடைத்துள்ளார். அதனடிப்படையில் நமது நாட்டில் உள்ள பொருளாதாரம் அனைத்து தரப்பினருக்கும் வளர்ச்சியை கொண்டு வரும் வகையில் இப்போது செயல்படுத்தப்படுகிறது. தற்போது ஊழலற்ற நிர்வாகம் தொடர்ந்து சாத்தியமாகி வருகிறது. அனைத்து திட்டங்களும் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
ஒப்பந்தம் கோரும் அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் நிர்வாகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தவறுகளுக்கு இடமில்லாமல் நிர்வாகம் நடைபெறுகிறது. நல்ல குடிநீர், சுகாதார காப்பீடு திட்டம், கல்வி உள்ளிட்ட பலத்திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்த முடிகிறது. நாட்டின் பொருளாதார வலிமையை அனைவரும் உணர்கின்றனர். அதனடிப்படையில் தான் மூன்றாவது முறையாக மோடி பிரதமராகி உள்ளார். தன்னுடைய அடிப்படை கட்டமைப்பில் இந்தியா உறுதியாக உள்ளது. அதன்படி தேசப் பாதுகாப்புக்கு பிரமர் முன்னுமை அளித்து வருகிறார்.
நாட்டின் பாதுகாப்புக்கு அதிகமாக செலவிடப்படுகிறது. நமது நீ்ண்டகால அமைதிக்கு பாதுகாப்பு முக்கியமாக இருக்கிறது. அதனால் தேசத்தின் பாதுகாப்பில் மத்திய அரசு சமரசத்துக்கு இடமளிக்காது. நமக்கு தற்போதைய தேவை பொருளாதார வலிமை தான். 80 கோடி மக்கள் வறுமை கேட்டுக்கு கீழ் உள்ளனர். அதனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாட்டின் நலனுக்கு எது முக்கியமோ அதனை மத்திய அரசு செயல்படுத்துகிறது. வரி செலுத்துவதில் நடுத்தர மக்களும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். அப்படி கூறக்கூடாது அவர்களை முன் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். டிஜிட்டல் பொருளாதார திட்டத்தினால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் வலிமை அடைந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் 10 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளோம். அதே நேரத்தில் உலக அளவில் சில அமைப்புகள் நாடுகளுக்கு நிதிக்கொடை அளித்து மாநில வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கிறார்கள். இது இந்தியாவிடம் எடுபடாது.
சிறு குறு தொழில்களில் வளர்ச்சி தேவை. அதற்கான அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு தேடி வருகின்றது. செயற்கை நுண்ணறிவு தொழிலில் இந்திய இளைஞர்கள் பயிற்சி பெற முடியும். இந்தியாவில் உள்ள 500 முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க மத்திய அரசு சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் அது செயல்பாட்டுக்கு வரும். ஊழல் இல்லாத காரணத்தால்தான் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது பிடிக்காமல் விரக்தியின் காரணமாக சிலர் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
கடந்த 4, 5 ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது வளர்ச்சியடைந்து வரும் பாரதத்துக்கு எடுபாடாது. கரோனா காலத்திலேயே நாம் பொருளாதாரத்தில் நிலையாக இருந்தோம். கலாச்சார பண்பாடு தான் நம் நாட்டை ஒருங்கிணைக்கிறது. அதற்கான திட்டங்களை செயல்படுத்துகின்றோம். பிரதமர் பல நாடுகளுக்கு சென்றுவருவதால் அந்த நாடுகளில் நம்முடைய கலாச்சாரத்தை செயல்படுத்துகின்றனர்” இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பள்ளி ஆசிரியை (தற்போது ஓய்வு ஆசிரியர்) சபீதா அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். அப்போது நிர்மலா சீதாராமன் ஆசிரியை காலில் விழுந்து ஆசி பெற்றார்.