நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி மலையில் அமைந்துள்ள ஹிந்து தர்ம வித்யா பீடத்தின் 41வது சமய வகுப்பு மாநாடு மற்றும் 35வது பட்டமளிப்பு விழா திருவட்டாரில் இன்று (செப்.22) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சமய வகுப்பு மாணவ மாணவியருக்கு வித்யா பூஷன் பட்டங்களை வழங்கினார். முன்னதாக ஆளுநருக்கு இந்து தர்ம வித்தியா பீடம் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதாவது: “இந்து தர்ம வித்யா பீடத்திற்கு நன்றி உடையவனாக இருக்கிறேன். பாரதத்தை மிகச் சிறந்த நாடாக உயர்த்தும் நோக்கில் 40 ஆண்டுகளாக இந்திய தர்ம வித்தியா பீடம் செயல்பட்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்து தர்மம் தான் பாரதத்தை உருவாக்கியுள்ளது. பாரதம், இந்து தர்மம் இரண்டையும் பிரிக்க முடியாது. கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளாக அயலக ஆட்சியில் நமது தர்மத்தை அழிக்க என்னென்ன முடியுமோ அதற்கான முயற்சிகள் செய்தார்கள். அவற்றை எல்லாம் கடந்து வந்துள்ளோம்.
நமது தர்மம் என்றுமே அழிக்க முடியாதது. அதனை பலவீனப்படுத்த முயற்சிகள் நடைபெறுகிறது. ஆனால் அவற்றில் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். சனாதன தர்மம் என்பது எளிமையானது. ஆனால் வெளியே தெரியும் போது சிக்கலானதாக தெரிகிறது. ஏனென்றால் பல கடவுள்களை வழிபடுகின்றோம். இதை பயன்படுத்திக் கொண்டு குழப்பத்தை உருவாக்க சிலர் முயற்சி எடுக்கின்றனர்.
சனாதன தர்மத்தை பற்றி எல்லோருக்கும் தெரிய வேண்டும். எல்லோருக்கும் விளக்கம் கூறும் அளவிற்கு தயாராக வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இளைய சமுதாயத்தினர் இதுகுறித்து விளக்கம் அளிக்க தயாராக வேண்டும்” இவ்வாறு ஆளுநர் தெரிவித்தார்.