எழுத்தாளரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுத்தில் தொடராக வெளிவந்த நாவல், வீரயுக நாயகன் வேள்பாரி. இந்த நிலையில், இந்த நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார் இயக்குநர் ஷங்கர். முன்னதாக இந்தப் படம் குறித்து உரையாற்றிய இயக்குநர் ஷங்கர்,
“கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோது வேள்பாரி நாவலை வாசித்து முடித்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை மூன்று பாகங்களாக திரைப்படமாக்குவது குறித்து பேசி முடிவு செய்திருக்கிறேன். விரைவில் வீரயுக நாயகன் வேள்பாரியை திரையில் பார்க்கலாம்” எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கான எழுத்துப் பணிகளும் நடந்து வருவதாக தகவல் வெளியானது. இதற்கிடையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியன் -3, நடிகர் ராம் சரண் நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படங்களை வெளியிடுவதற்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில்தான், எக்ஸ் பக்கத்தில், இயக்குநர் ஷங்கர் கடுமையான எச்சரிக்கையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “அனைவரின் கவனத்திற்கு… பலரும் சு.வெங்கடேசனின் நாவலான ’வீரயுக நாயகன் வேள்பாரி’யின் முக்கியமான காட்சிகளை, பகுதிகளை தங்கள் படங்களில் இணைக்கின்றனர். சமீபத்தில் வெளியான ஒரு டிரைலரில் மிக முக்கியமான பகுதியைப் பார்த்தேன்.
நாவலின் காப்புரிமையைப் பெற்றவனாக உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது. திரைப்படங்கள், இணையத் தொடர்களில் வேள்பாரி நாவலை பயன்படுத்தாதீர்கள். படைப்பாளிகளின் உரிமையை மதியுங்கள். மீறி நாவலிலிருந்து காட்சிகளை எடுத்தால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.