கடந்த பிப்ரவரி மாதத்தில் டெல்லியிலிருந்து இலங்கைக்கு ஒரு முக்கிய அழைப்பு செல்கிறது. அந்த அழைப்பை ஏற்று இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசநாயக்கே டெல்லிக்கு வருகிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலும் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கரும் அவருடன் முக்கிய சந்திப்பில் ஈடுபடுகின்றனர். தெற்காசிய அளவில் முக்கியமான சந்திப்பாக இது பார்க்கப்பட்டது.
அமெரிக்கா, சீனா, இந்தியா என பெரிய நாடுகளெல்லாம் இலங்கையின் அதிபர் தேர்தலை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் முடிவுகளில் மக்கள் விடுதலை முன்னணியின் அநுர குமார திசநாயக்கேவின் ஆதிக்கம் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே இருந்தது. தற்போது அதிபர் தேர்தலில் வெற்றி வாகையும் சூடியிருக்கிறார்… யார் இந்த அநுர குமார திசநாயக்கே?
அநுர குமார திசநாயக்கேவை பற்றி பார்ப்பதற்கு முன் அவரின் மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுனா) கட்சியைப் பற்றி பார்த்தாக வேண்டும். அப்போதுதான் அநுர குமாராவின் எழுச்சியையும் அதன் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள முடியும். ஜனதா விமுக்தி பெரமுனா மார்க்சிய சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்ட இடதுசாரி கட்சி. இலங்கையில் இடதுசாரி கட்சிகளின் இயக்கம் 1935-லிருந்து தொடங்குகிறது. லங்கா சமநிலை சமூக கட்சி என்ற கட்சிதான் அந்த சமயத்தில் இலங்கையின் மிகப்பெரிய இடதுசாரி கட்சியாக இருந்தது. கருத்து மோதல்களால் இந்த கட்சி உடைந்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி என்ற புதிய கட்சி உதயமாகிறது. சோவியத் யூனியனிலும் சீனாவிலும் நடந்த மாற்றங்களைத் தொடர்ந்து இந்த கட்சியும் இரண்டாகப் பிரிந்தது.
1964-ல் இலங்கையில் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. அப்போது வாடிக்கொண்டிருந்த மக்களின் பக்கம் நிற்காமல் அரசின் பக்கமாக இந்த இடதுசாரி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் நிற்கவே அதிருப்தி ஏற்படுகிறது. இந்த சமயத்தில்தான் ரோஹன விஜேவீராவின் எழுச்சி ஆரம்பிக்கிறது. கம்யூனிச பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவரான இவர் ஒரு ஸ்காலர்ஷிப்பின் மூலம் மாஸ்கோவுக்குச் சென்று உயர்கல்வி படித்து வந்தார். இங்கிருக்கும் பழைய இடதுசாரி இயக்கங்களினால் உழைக்கும் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை எனக் கூறி புதிய கட்சியைத் தொடங்கும் வேலையில் இறங்குகிறார். பழைய இடதுசாரி இயக்கங்கள் அரசுடன் கைகோத்து நின்றதால் ரோஹன விஜேவீரா அரசால் கைதும் செய்யப்படுகிறார்.
சிறையிலிருந்து வெளியே வந்தவர் ஜனதா விமுக்தி பெரமுனா என்ற கட்சியையும் தொடங்குகிறார். கொழும்புவில் கட்சியின் முதல் பேரணியை விஜேவீரா நடத்தியபோது பழைய இடதுசாரி இயக்கங்கள் இவரை அமெரிக்காவுடைய சிஐஏவின் கைக்கூலி என்று விமர்சித்தனர். அந்த தொடக்கக்காலத்துக்கு பிறகும் கிளர்ச்சிகள், போராட்டம், வன்முறைகள், அடக்குமுறை என எவ்வளவோ விஷயங்களை கடந்துதான் ஜனதா விமுக்தி பெரமுனா அதிபர் தேர்தலில் வெல்லும் நிலைக்கு வந்திருக்கிறது.
அநுர குமார திசநாயக்கே 1968-ல் அநுராதப் புரத்தில் கூலித்தொழிலாளியின் மகனாக பிறந்தவர். இலங்கை பெரும்பாலான சமயங்களில் எதோ ஒரு அரசியல் நெருக்கடியால் பீடிக்கப்பட்ட தேசமாகவே இருந்திருக்கிறது. அநுர குமார வளர்ந்து வந்த காலக்கட்டமும் ஜனதா விமுக்தி பெரமுனா பரபரப்பை கிளப்பிக் கொண்டிருந்த காலக்கட்டமும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தவை. 80 களின் இறுதியில் இந்திய ராணுவம் இலங்கையில் கால் பதித்ததற்கு எதிராகவும் ராஜிவ் காந்தி ஜெயவர்த்தனா ஒப்பந்தத்துக்கு எதிராகவும் ஜனதா விமுக்தி பெரமுனா ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டது. இந்த சமயத்தில் கல்லூரி படிப்பை படித்துக் கொண்டிருந்த அநுரா ஜனதா விமுக்தியின் மாணவர் அமைப்பில் சேர்கிறார். தீவிரமான அரசியலில் ஈடுபடுகிறார்.
1990 களுக்குப் பிறகு ஆயுதப் போராட்டங்களை விடுத்து ஜனநாயக அரசியலுக்குள் முழமையாக இறங்குவதாக ஜனதா விமுக்தி பெரமுனா அறிவிக்கிறது. அநுராவும் மாணவர் அமைப்பு மூலம் கட்சிக்காக தீவிரமாக உழைக்கிறார். 1995 இல் சோசலிச மாணவர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அநுரா தேர்வாகிறார். ஜனதா விமுக்தியின் மத்திய குழுவிலும் அவருக்கு இடம் கிடைக்கிறது. 1998 இல் கட்சியின் முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் பொலிட்பியூரோவில் உறுப்பினராகிறார். 2000 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் வெற்றிபெற்றார். படிப்படியாக முன்னேறியவர் 2014 இல் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்து சேர்ந்தார்.
2022 இல் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான் மக்களை ஜனதா விமுக்தியை நோக்கி திரும்ப வைத்தது. ‘நாட்டு மக்கள் இதுவரை ஆட்சி செய்த கட்சிகளின் மீது அதிக நம்பிக்கையை வைத்திருந்தனர். ஆனால், அவர்கள் மக்களை ஏமாற்றிவிட்டனர். இங்கே ஒரு அடிப்படை மாற்றமே தேவைப்படுகிறது.’ என அநுரா பிரசாரம் செய்தார். பொருளாதார நெருக்கடியை நீக்குகிறேன் என்ற பெயரில் நம்முடைய நாட்டின் வளங்களையும் மதிப்புமிக்க சொத்துகளையும் வெளிநாடுகளிடமும் சர்வதேச அமைப்புகளிடமும் ஆளும்தரப்பினர் அடகு வைக்கின்றனர் என்றார். ‘மக்கள் கையறு நிலையில் இருக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையிலிருந்து எங்களால் மட்டுமே தேசத்தை மீட்க முடியுமென மக்கள் நம்புகின்றனர்’ என்றார். தங்களுடைய கட்சியினர் நிகழ்த்திய கடந்தகால வன்முறைகளுக்காக பகிரங்க வருத்தத்தை தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி தங்களுடைய கொள்கைகளிலும் வளர்ச்சி சார்ந்து சில சமரசங்களை செய்து கொண்டார்.
கிட்டத்தட்ட பாழ்பட்டு போயிருக்கும் சமூகத்தை மீட்க வந்த புரட்சியாளனாக மீட்பனாக தன்னையும் ஜமுதா விமுக்தி பெரமுனாவையும் மக்கள் நினைப்பதாக அநுரா எண்ணினார். இப்போது தேர்தல் முடிவுகள், அவரை அதிபராக்கியிருக்கின்றன.
பிரேமதேசாவின் மகன் என குடும்ப சென்டிமென்ட் பேசிய சஜித் பிரேமதேசாவையும் மக்கள் சீண்டவில்லை. ‘கடந்த இரண்டு ஆண்டுகளில் என்னால் முடிந்தவரை தேசத்தை மீட்டுவிட்டேன். இன்னும் செய்ய வேண்டிய பணிகள் இருக்கிறது. அதற்காக வாய்ப்புக் கொடுங்கள்.’ என ஒன்ஸ்மோர் கேட்ட ரணில் விக்ரமசிங்கேவையும் மக்கள் நிராகரித்திருக்கின்றனர். கடந்த அதிபர் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனா சார்பில் அநுரா 3.16 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். காலம் மாறியிருக்கிறது. சூழல் மாறியிருக்கிறது. மக்களின் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அநுரா குமார திசநாயக்கே அதிபர் அரியணையில் அமரவிருக்கிறார்.
அநுராவின் இந்த வெற்றி, ஒரு வரலாற்று பாய்ச்சல் என்றே கூற வேண்டும். ஜனநாயகத்தில் மக்கள்தான் மன்னர்கள் என்பதை உரக்கச் சொல்லும் இன்னொரு தீர்ப்பு இது!