சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வங்கேதசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் எடுக்க, வங்கதேசம் அணி 149 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 287 ரன்கள் எடுத்தபோது டிக்ளோர் செய்தது. இதனால் இந்திய அணி வங்கதேச அணியைவிட 514 ரன்கள் முன்னிலை பெற்று 515 ரன்களை வெற்றி இலக்காகவும் நிர்ணயித்தது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி இக்கட்டான சூழலில் இருந்தபோது பேட்டிங்கில் 113 ரன்களை குவித்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சில் அமர்களப்படுத்தினார். அவர் மட்டும் 6 விக்கெட்டுகளை அள்ளி வங்கதேச அணியின் பேட்டிங்கை நிலைகுலைய செய்தார். சென்னை சேப்பாக்கம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினின் சொந்த ஊர் மைதானம் என்பதால், அவரின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. அத்துடன் ஆட்டநாயகன் விருதும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கிடைத்தது.
இது குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், “சென்னையில் விளையாடுவது எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். நான் இங்கு தான் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். சச்சின் விளையாடியதை இங்கிருக்கும் கேலரியில் அமர்ந்து பார்த்திருக்கிறேன். ஒருநாள் இந்த மைதானத்தில் நானும் ஆடுவேன் என நினைத்தேன். அந்த கனவு நனவாகியிருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை பேட்டிங்கில் ஜடேஜா எனக்கு பக்கபலமாக இருந்தார். அவரின் ஆலோசனைகள் நான் சிறப்பாக விளையாட உதவியது. பந்தவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி. நூறு ரன்கள் அடிக்க வேண்டும், 5 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்றெல்லாம் யோசிக்கமாட்டேன், அணிக்கு சிறப்பாக பங்களிப்பு செய்ய வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய எண்ணம். அது நிறைவேறியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என தெரிவித்தார்.
கேப்டன் ரோகித் சர்மா பேசும்போது, ” இப்போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ரிஷப் பந்த், சுப்மன் கில், அஸ்வின் ஆகியோர் சிறப்பாக ஆடியது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அஸ்வின் எப்போது விளையாடினாலும் அணிக்கு தேவையானதை சரியான நேரத்தில் கொடுக்ககூடிய பிளேயராக இருக்கிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் அணி வெற்றிக்கு தேவையானதை செய்து விடுகிறார். இந்த ஆட்டம் அடுத்த போட்டியிலும் இருக்கும்” என கூறினார்.