சென்னை: ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி ஆந்திராவில் உள்ள அல்ஸ்டாம் தொழிற்சாலையில் நிறைவடைந்துள்ளது. சோதனைக்கு பிறகு, அடுத்த மாதம் இந்த ரயில் சென்னைக்கு அனுப்பப்பட உள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் 3 பெட்டிகள் இருக்கும். இதில் முதல் கட்டமாக, 36 ரயில்களை ரூ.1,215.92 கோடி மதிப்பில் தயாரித்து வழங்க, அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியது. இந்த வகையை சேர்ந்த முதல் மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணி ஆந்திர மாநிலம் சிட்டியில் கடந்த பிப்.8-ம் தேதி தொடங்கியது.
இப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இதை தொடர்ந்து, சோதனை தடத்துக்கு இந்த ரயில் நேற்று மாற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தமிழக சிறப்பு முயற்சிகள் துறை செயலர் ஹர்சகாய் மீனா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள், இயக்கம்), தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், அல்ஸ்டாம்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்அனில்குமார் சைனி மற்றும் பல்வேறு அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தொழிற்சாலை வளாகத்தில் அனைத்து சோதனைகளும் முடிந்தபிறகு, வரும் அக்டோபர் மாதம் சென்னை பூந்தமல்லி மெட்ரோ ரயில் பணிமனைக்கு இந்த ரயில்அனுப்பப்பட உள்ளது. அங்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்படும். அதன்பிறகு, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பல்வேறு சோதனை ஓட்டங்கள் நடத்தப்படும். பின்னர், சட்டப்பூர்வ ஒப்புதலுக்கு பிறகு, வழக்கமான சேவையை தொடங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பைபாஸ் இடையே 4-வது வழித்தடம் அமைகிறது. இதில் பூந்தமல்லி – கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரை உயர்மட்ட பாதை அமைக்கப்படுகிறது. இங்குபூந்தமல்லி – போரூர் இடையே 2025 நவம்பரில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த தடத்தில்தான் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் முதன்முதலாக இயக்கப்பட உள்ளது. அடுத்தடுத்து, ஆந்திராவில் மேலும் பல மெட்ரோ ரயில்கள் உற்பத்தியாகி சென்னைக்கு வர உள்ளன.