நியூயார்க்: இந்தியாவின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பமே அடித்தளம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கூகுள், அடோபி உள்ளிட்ட 15 பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் (சிஇஓ) பிரதமர் மோடி நேற்று முன்தினம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: 21-ம் நூற்றாண்டை தொழில்நுட்பம் வழி நடத்துகிறது. வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இந்த லட்சிய பாதையில் அதிவேகமாக முன்னேறி வருகிறோம். இந்தியாவின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பமே அடித்தளமாக அமைந்துள்ளது. உயிரி தொழில்நுட்பம், மருந்து உற்பத்தித் துறையில் உலகத்தின் முன்னோடியாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளன. உலகம் எதிர்கொண்டிருக்கும் பல்வேறு சவால்களுக்கு இந்தியா, அமெரிக்காவால் சிறந்த தொழில்நுட்ப தீர்வை வழங்க முடியும்.
ஒரு மனிதருக்கு முதுகெலும்புமுக்கியமானது. இதேபோல தொழில்நுட்பத்தின் முதுகெலும்பாக சிப் விளங்குகிறது. ஒரு காலத்தில் 5ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா பின்தங்கிய நிலையில் இருந்தது. இப்போது 5 ஜி தொழில்நுட்பத்தில் முன்வரிசைக்கு முன்னேறி உள்ளோம். அடுத்த கட்டமாகசெமிகண்டக்டர் துறையில் அதிதீவிர கவனம் செலுத்தி வருகிறோம்.இந்த துறையிலும் உலகத்தின் முன்னோடியாக உருவெடுப்போம். இவ்வாறு பிரதமர் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு குறித்து இந்திய வம்சாவளியை சேர்ந்த கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியதாவது: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தில் எடுத்துரைத்தார். இந்ததுறையில் தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அவர் அறிவுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த அவர் உறுதி பூண்டிருக்கிறார்.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை தொடங்குவதற்கு பிரதமர் நரேந்திரமோடி தொடர்ந்து ஊக்கம் அளித்துவருகிறார். இதன்காரணமாக கூகுளின் பிக்சல் செல்போன்கள்இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஐஐடி கல்வி நிறுவனங்களுடன் கூகுள் கைகோத்து செயல்படுகிறது. சுகாதாரம், கல்வி, வேளாண்மை, மின் உற்பத்தி, எரிசக்தி துறையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார். இதை அனைத்து சிஇஓக்களும் ஆமோதித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐபிஎம் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா, அடோபி தலைமை செயல் அதிகாரி சாந்தனு நாராயண் உள்ளிட்டோர் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினர்.