நியூயார்க்: அமெரிக்க டெக் நிறுவன சிஇஓ-க்களுடன் பிரதமர் மோடி வட்டமேசை ஆலோசனை மேற்கொண்டார். இதில் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையும் பங்கேற்றார். இதில் பிரதமர் மோடி கூறியது குறித்து அவர் கூறும்போது, “கூகுள் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் உற்பத்தி சார்ந்த தயாரிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி ஊக்கம் அளித்தார். எங்களது பிக்சல் போன்கள் இந்தியாவில்தான் இப்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்பது இந்நேரத்தில் எங்களுக்கு பெருமை தருகிறது.
ஏஐ தொழில்நுட்பம் இந்திய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். ஏஐ மூலம் இந்தியாவில் மாற்றம் கொண்டு வர விரும்புகிறார். குறிப்பாக கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்ற துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். அந்த வகையில் அது சார்ந்த பணிகளை மேற்கொள்ளுமாறு எங்களை கேட்டுக் கொண்டார்.
ஏஐ குறித்த தெளிவான பார்வையை பிரதமர் மோடி கொண்டுள்ளார். இந்த தொழில்நுட்பம் மக்களுக்கு அதிகம் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதை உறுதி செய்வதில் அவர் உறுதியாக உள்ளார். இந்தியாவுடன் இணைந்து பயணிப்பதை எண்ணி பெருமை கொள்கிறோம். ஏற்கெனவே எங்களது நிறுவனங்களை பல்வேறு திட்டங்களை இந்தியாவில் மேற்கொண்டு வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் சார்ந்து முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளோம்” என சுந்தர் பிச்சை தெரிவித்தார்.