கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) முன்னணி சார்பில் போட்டியிட்ட அநுரா குமார திசாநாயக்க (56) வெற்றி பெற்றார். இலங்கையின் 9-வது அதிபராக இன்று பதவியேற்க உள்ளார்.
இலங்கை அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில், 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய சக்தி முன்னணியின் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள்சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க, பொதுஜன பெரமுன கட்சியின் நமல் ராஜபக்ச ஆகியோர்தான் முக்கிய வேட்பாளர்களாக இருந்தனர்.
சனிக்கிழமை மாலையே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் சஜித் பிரேமதாசவுக்கும், அநுராவுக்கும் இடையேதான் கடுமையான போட்டி காணப்பட்டது. இருப்பினும், 50 சதவீத வாக்குகளை யாரும் பெற முடியவில்லை. முதலில் வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அநுர 42 சதவீத வாக்குகளை யும், சஜித் பிரேமதாசா 32 சதவீத வாக்குகளையும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய அதிபர் ரணில் முதல் இரண்டு இடங்களுக்குள் வரத்தவறியதால் முதல் சுற்றிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
முதல் கட்டத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெறாத காரணத்தால், 2-வது விருப்ப வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 2 மற்றும் 3-வது விருப்ப சுற்று வாக்கு எண்ணிக்கையின்போதும் அநுர முதலிடத்தில் இருந்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இலங்கையின் 9-வது அதிபராக மார்க்சிஸ்ட் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று பதவியேற்க உள்ளார்.
அநுர கூறுகையில், “பல நூற்றாண்டு நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகியுள்ளது. இந்த சாதனை எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. உங்களின் கூட்டு முயற்சியின் மூலமே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. உங்களின் அர்ப்பணிப்பு நம்மை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்தப் புதிய தொடக்கத்தின் அடித்தளமாக இருக்கும். புதிய மறுமலர்ச்சி இலங்கையை படைப்போம்” என்றார்.