சிஎஸ்கேவில் தோனி Uncapped வீரராக தக்கவைக்கப்பட்டால்… அவருக்கு சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?

MS Dhoni, IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான விதிகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர், 50 ஓவர்கள் வடிவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் என வரிசைக்கட்டி இந்திய அணிக்கு பல முக்கியமான தொடர்கள் இருந்தாலும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் மீதான இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. 

அது வேறொன்றுமில்லை… தோனி (MS Dhoni) அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடும் வாய்ப்பு தற்போது பிரகாசமாகியிருப்பதால் ரசிகர்கள் குதூகலமடைந்துள்ளனர். இன்னும் ஐபிஎல் மெகா ஏலத்தின் விதிகள் மட்டுமின்றி, ஐபிஎல் மெகா ஏலம் (IPL 2025 Mega Auction) எப்போது, எங்கு நடைபெறும் என்ற எவ்வித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை. தோனி விளையாட இருப்பது குறித்தும், சிஎஸ்கே அவரை மீண்டும் ஒருமுறை தக்கவைக்க இருப்பது குறித்தும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியான நிலையில் ரசிகர்கள் தங்களின் எதிர்பார்ப்புகளை இரட்டிப்பாக்கி உள்ளனர்.

Uncapped வீரராக எம்எஸ் தோனி?

அதாவது, ஜூலை மாதமே ஐபிஎல் நிர்வாகக் கமிட்டி அனைத்து அணிகளின் உரிமையாளர்களையும் சந்தித்து விதிகள் உள்பட பல விவகாரங்கள் குறித்து விவாத்திருந்தது. அதில் எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம், வீரர்களை தக்கவைப்பதில் விதிக்கப்படும் கட்டுபாடுகள், ஏலத்தின் பர்ஸ் தொகையை உயர்த்துவது உள்பட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகளாகும் வீரரை, Uncapped வீரராக கருதும் விதி குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், தோனியை சிஎஸ்கே Uncapped வீரராக தக்கவைக்க அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் பரவின. மேலும், 5 வீரர்களை தக்கவைக்க ஐபிஎல் நிர்வாகம் அனுமதிக்கும் என தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் ருதுராஜ், பதிரானா, ஜடேஜா, சிவம் தூபே ஆகிய நால்வரோடு கடைசியாக தோனியையும் சிஎஸ்கே தக்கவைக்கலாம் என கூறப்படுகிறது. 

கடந்த மெகா ஏலத்தில் தோனி

அப்படி தோனி Uncapped வீரராக தக்கவைக்கப்பட்டால் அவர் என்ன தொகையில் தக்கவைப்படுவார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் உள்ளது. கடந்த 2022 மெகா ஏலத்தை முன்னிட்டு சிஎஸ்கேவில் அதிகபட்சமாக ஜடேஜா ரூ.16 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். மொயின் அலி ரூ. 8 கோடிக்கும், ருதுராஜ் 6 கோடிக்கும் தக்கவைக்கப்பட்ட நிலையில், தோனி ரூ.12 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். 2008ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் ஏலத்தில் தோனியை சிஎஸ்கே ரூ. 6 கோடி கொடுத்து வாங்கியது. அப்போது அவர்தான் அதிக விலையில் எடுக்கப்பட்ட வீரர் ஆவார்.

தோனிக்கு எவ்வளவு கிடைக்கும்…?

ஆனால், வரும் சீசனில் அவர் Uncapped வீரராக தக்கவைக்கப்பட்டால் அதிகபட்சமாக அவருக்கு ரூ. 5 கோடியே கிடைக்கும் என கூறப்படுகிறது. கடந்த மெகா ஏலத்தில் Uncapped வீரர்களை தக்கவைக்க ரூ. 4 கோடி ஒதுக்க வேண்டும் என விதி இருந்த நிலையில், இந்தாண்டு அது ரூ. 5 கோடியாக உயர்த்தப்படலாம். அந்த வகையில், பார்த்தோமானால் 2008ஆம் ஆண்டு ஏலத்தில் தோனிக்கு கிடைத்த தொகையை விட தற்போது குறைவான தொகையே கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது. சிஎஸ்கே அணிக்கு (Chennai Super Kings) 15 சீசன்களில் 5 கோப்பைகளை வென்றுகொடுத்தவர் தோனி ஆவார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.