சென்னை: “தமிழக மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு உன்னிப்பாக கவனிக்கிறது,” என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் இலவச மருத்துவ முகாமை தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா இன்று (செப்.23) தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு செப்.17-ம் தேதி முதல் அக்.2-ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடந்து வருகிறது. செப்.23-ம் தேதி முக்கியமான நாள். பிரதமர் மோடியால் ஏழை மக்கள் பயன்பெறும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் அறிவிக்கப்பட்டது இதே நாளில் தான். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 50 கோடி பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டை மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் காப்பீடு திட்டம் ரூ.2 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது.ஆனால், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை இன்சூரன்ஸ் கிடைக்கிறது.
திமுக ஆட்சிக் காலத்தில் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால், பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு இதுவரை ஒரு மீனவர் கூட கொல்லப்படவில்லை. ராமேசுவரத்தைச் சேர்ந்த ஒரு மீனவரை மட்டும், கிரிக்கெட் போட்டியில் இலங்கையை இந்தியா வென்ற காரணத்தால், இலங்கை கடற்படை கொலை செய்தது. மத்திய அரசு மீனவர் பிரச்சினைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாமும் இலங்கை மீனவர்களை கைது செய்தும் வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாவட்டத் தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.