புதுடெல்லி: துப்புக் கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்ட 4 நக்ஸல்கள் சத்தீஸ்கர் போலீஸாரிடம் நேற்று சரண் அடைந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நக்ஸல்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக தாந்தேவாடா மாவட்டத்தில் அதிக அளவிலான நக்ஸல்கள் நடமாடி வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதற்காக சிறப்புப் பிரிவை சத்தீஸ்கர் மாநில அரசு அமைத்துள்ளது. மேலும், தாந்தாவாடா மாவட்டத்தில் துணை ராணுவமான சிஆர்பிஎஃப் படையினர் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு அவ்வப்போது தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று 3 பெண் உட்பட 4 நக்ஸல்கள் போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளனர். இதுகுறித்து தாந்தாவாடா போலீஸ் எஸ்.பி. கவுரவ் ராய் கூறியதாவது: துப்புக் கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டிருந்த 4 நக்ஸல்கள் இன்று போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளனர். அவர்கள் தங்களது ஆயுதங்களை கைவிட்டுவிட்டு வந்து சரண் அடைந்துள்ளனர். மாவோயிஸ்ட் சித்தாந்தத்தின் மீதான ஏமாற்றம், மாவோயிஸ்ட் குழுவுக்குள் ஏற்பட்ட உள்மோதல் காரணமாக அவர்கள் போலீஸில் சரண் அடைந்துள்ளனர்.
ஹுங்கா தாமோ என்கிற தாமோ சூர்யா (27), அவரது மனைவி ஆயிட்டி தாட்டி (35), தேவே என்கிற விஜ்ஜே (25), மாதவி ஆகியோர் சரண் அடைந்தவர்கள். இதில் ஆயிட்டி தாட்டி, ஹுங்கா தாமோ ஆகிய இருவர் குறித்த துப்பு கொடுப்பவர்களுக்கு தலாரூ.8 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் சத்தீஸ்கர் – தெலங்கானா எல்லையில் உள்ள பாம்ப்பே வனப்பகுதியில் 2018-ல்நடைபெற்ற தாக்குதலில் தொடர்புடையவர்கள்.
அதேபோல் தேவே குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.3 லட்சமும், மாதவி குறித்து துப்பு தருபவர்களுக்கு ரூ.1 லட்சமும் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தேவே என்பவர் நக்ஸலிசம் குறித்து தங்களுடைய சகாக்களுக்கு பாடம் எடுத்தவர் ஆவார். மேலும்மாதவி, நக்ஸல்களின் பெண்கள் பிரிவான பூவர்த்தி கிராந்திகாரி ஆதிவாசி மஹிளா சங்கத்தின் தலைவராக இருந்தவர். இவர்கள் குறித்துதகவல் தந்தால் மொத்தம் ரூ.20லட்சம் என பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள், தற்போது சரண் அடைந்துள்ளனர். இவர்கள் ‘கிராமம்/வீடுகளுக்குத் திரும்புங்கள்’ திட்டத்தின் கீழ் சரண் அடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தை கடந்த 2020-ம்ஆண்டு சத்தீஸ்கர் அரசு தொடங்கியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.