புதுடெல்லி: பண்டிகைக் காலம் நெருங்கி வருகிற நிலையில், ரயில்களில் டிக்கெட் சோதனைக்கு என்று சிறப்புக் குழுவை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
தொடர் பண்டிகை விடுமுறை சமயத்தில், மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்வது வழக்கம். பேருந்துகளில் கட்டணம் அதிகம் என்பதால், நிறையமக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர்.
பண்டிகைக் காலங்களில் ரயில்களில் கூட்டம் காணப்படும் நிலையில், பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், இத்தகைய பயணிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க சிறப்பு சோதனையை மேற்கொள்ள மத்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
சட்டப்படி நடவடிக்கை: இது தொடர்பாக 17 ரயில்வே மண்டல மேலாளர்களுக்கு மத்தியரயில்வே அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், வரும்அக்டோபர் 1 முதல் 15 வரையிலும், அக்டோபர் 25 முதல் நவம்பர் 10 வரையிலும், ரயில்களில் பயணிகளிடம் சிறப்பு சோதனை நடத்த வேண்டும் என்றும் டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்கள் மீதுசட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ரயில்களில் காவல்துறையினர் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் நிகழ்வு அதிகரித்துள்ள நிலையில், அவர்களிடம் கூடுதல் சோதனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.