தோனிமா விமர்சனம்: யதார்த்த மனிதர்களின் வாழ்வியல்; ஆனால் பாதியில் தடம் மாறிய திரைக்கதை!

சென்னை மாதவரம் பகுதியில் தனது மாமனார் மாமியாருடன் வசித்துவரும் தனம் (ரோஷ்னி பிரகாஷ்), வீட்டுவேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் விளிம்புநிலை தொழிலாளி. செவித்திறன் சவாலுடைய தனது மகன் டிராவிட்டின் (விஷவ் ராஜ்) சிகிச்சைக்காகப் பணம் சேர்த்து வருகிறார். ஒருநாள் வீட்டுவேலை முடித்து சைக்கிளில் வந்துகொண்டிருக்கும் அவர், குப்பைத்தொட்டியிலிருந்து ஒரு வெளிநாட்டு நாய்க்குட்டியை (தோனிமா) எடுக்கிறார். அதை தன் வீட்டிற்கு எடுத்து வந்து வளர்க்கவும் தொடங்குகிறார்.

இந்நிலையில் திருச்சியில் கட்டடத் தினக்கூலியாக வேலை செய்து வரும் கணவர் கோட்டியிடம் (காளி வெங்கட்) குழந்தையின் மருத்துவச் செலவுக்குப் பணம் கேட்கிறார். அப்போது கோட்டி தரச் சொன்னதாகக் கூறி ஒரு வடநாட்டுத் தொழிலாளி குறிப்பிட்ட தொகையை தனத்திடம் கொடுத்துச் செல்கிறார். நாள்கள் செல்ல அந்த வடநாட்டுத் தொழிலாளி தனக்குத் திருமணம் என்று சொல்லி தனத்திடம் கொடுத்த பணத்தினை திரும்பக் கேட்கிறார். அதுநாள் வரையிலும் தன் கணவன் அனுப்பிய பணம் என்று நினைத்தவர் அது கடன் வாங்கிய பணம் என்று தெரிந்தவுடன் அதிர்ச்சியாகிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது, காளி வெங்கட் பணத்தினை என்ன செய்தார், நாய்க்குட்டிக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம் என்பதே படத்தின் கதை.

தோனிமா விமர்சனம்

குடும்ப சுமையைத் தனியாளாகத் தாங்கும் மனதிடம், நாள் முழுக்க உழைத்த களைப்பினால் ஏற்படுகிற சோர்வு, கணவனால் ஏற்படும் சிக்கலால் உண்டாகிற கையறுநிலை என யதார்த்தமான நடிப்பைத் தந்து கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் ரோஷினி பிரகாஷ். குறிப்பாகப் பணத்தைத் தொலைத்த பின்னர் பதறுகிற இடத்தில் நமது பரிதாபத்தை வாங்கிக் கொள்கிறார். தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் குடியைப் பற்றி மட்டுமே எந்நேரமும் சிந்தித்துக்கொண்டிருக்குபவராக காளி வெங்கட். வெறுப்பினைச் சம்பாதித்துக் கொள்ளும் பாத்திரத்துக்குக் கச்சிதமான பொருத்தம். பெற்றோரின் பிரச்னையைப் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையைக் குழப்பத்தோடு பார்க்கும் சிறுவனாக விஷவ் ராஜ் சிறப்பாக நடித்திருக்கிறார். இதுதவிர விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, கல்கி ராஜா, தேனப்பன் ஆகியோர் வந்து போகிறார்கள்.

ஒரேயொரு அறையை மட்டுமே வீடாகக் கொண்டிருக்கும் வாழ்வையும், இரவு நேரக் காட்சிகளையும் சிறப்பான ஒளியுணர்வோடு தந்திருக்கிறது ஒளிப்பதிவாளர்கள் பாக்யராஜ் மற்றும் சஜீத் குமார் கூட்டணி. இருப்பினும் கருமேகங்கள் சூழ்ந்து இடி இடிப்பது போல ரிப்பீட் அடிக்கும் காட்சிகளில் சற்றே செயற்கைத்தனம் தெரிகிறது. இயல்பாகப் போய்க் கொண்டிருக்கும் காட்சிகளுக்குப் படத்தொகுப்பாளர் தமிழரசனின் வெட்டுகள் டக்டக்கென விழுந்து ஒரு கோர்வையே இல்லாத ஓர் அனுபவத்தைத் தருகின்றன. பழைய பாணியிலான டிரான்சிஷன்களும் எட்டிப்பார்க்கின்றன. இ.ஜெ. ஜான்சன் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை, பின்னணி இசை குறைசொல்லாத அளவுக்குச் சுமாராகப் படத்துக்கு உதவியிருக்கிறது. ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கான மேடை, பழைய பம்ப் அடுப்பு, விளிம்புநிலை மனிதர்களின் வீட்டின் சித்திரிப்பு எனத் தனது பணியை நிறைவாகச் செய்திருக்கிறார் கலை இயக்குநர் எம்.மதன்.

தோனிமா விமர்சனம்

ஒரு கலை திரைப்படத்துக்கான திரைமொழியுடன் சிறப்பாகத் தொடங்குகிறது படம். விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையச்சரடாக வைத்துப் பின்னப்பட்ட திரைக்கதையில் நாயகியின் வர்க்கப் பின்னணி ஆழமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதே போலக் கிளைக்கதையாகப் பக்கத்துக்கு வீட்டிலிருக்கும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் நடனமாடும் தம்பதியின் வாழ்க்கையைக் காட்டிய விதமும், இயக்குநர் ஏதோ சமூகத்துக்குச் சொல்ல வருகிறார் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால், அது கதைக்குத் தொடர்பில்லாமல் முடிந்து போவது ஏமாற்றமே! அதேபோல முதல் அரை மணிநேரத்தில் நடிகர்களின் சிறப்பான நடிப்பைத் தவிர, கதை எதை நோக்கிப் போகிறது குழப்பம் எட்டிப் பார்க்கிறது. திடீரென வரும் ஒரு திருப்பமும் வந்த வேகத்திலேயே வீரியம் இழந்துவிடுகிறது.

பட்டா வாங்கி தருவதாக வரும் கதாபாத்திரம், அரசியல்வாதி, நாய் பிடிக்க வரும் நபர் என்று கதாபாத்திரங்களின் நோக்கம் இதுவரை வந்த யதார்த்த திரைமொழியை அழித்து செயற்கையான அனுபவத்தைக் கொட்டிவிட்டுச் செல்கின்றன. வீட்டிற்குள் வருகிற ‘வெளிநாட்டு நாயின் பெயர்’தான் படத்தின் தலைப்பாக இருக்கிறது, ஆனால் அதற்கும் இந்தப் படத்திற்கும் உச்ச காட்சியைத் தவிர வேறு எந்த இடத்திலும் பெரிதாகத் தொடர்பில்லை.

தோனிமா விமர்சனம்

தொடக்கத்தில் ஒரு கலைப்படத்துக்கான திரைமொழியோடு யதார்த்த மனிதர்களைப் பதிவு செய்த திரைக்கதை பயணம், எங்குச் செல்கிறோம் என்று வழி தெரியாமல் ஓர் எல்லைக்கு மேல் சரக்கு தீர்ந்த வண்டியாய் நின்றுபோகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.