2024-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதின் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படம்’ பிரிவுக்கு இந்தியாவின் அதிகாரபூர்வ என்ட்ரியாக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது கிரண் ராவின் ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம்.
தமிழிலிருந்து ஆறு திரைப்படங்களும், தெலுங்கிலிருந்து மூன்று திரைப்படங்களும், மலையாளத்திலிருந்து நான்கு திரைப்படங்களும், ஒடியா மொழியிலிருந்து ஒரு திரைப்படமும், இந்தியிலிருந்து பன்னிரெண்டு திரைப்படங்களும், மராத்தி மொழியிலிருந்து மூன்று திரைப்படங்களும் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்வதற்கான பரிசீலனை பட்டியலில் இருந்தது. இதிலிருந்து ‘லாபாத்தா லேடீஸ்’ திரைப்படம் அதிகாரபூர்வ என்ட்ரியாக பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
இம்முறை அதிகாரபூர்வ என்ட்ரியாக ஒரு இந்தி திரைப்படத்தை தேர்வு செய்திருக்கிறார்கள். இதற்கு முன்பு ஆஸ்கருக்கு இந்தியாவிலிருந்து ‘சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவு’க்கு பரிந்துரை செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?
சிவாஜி கணேசன், ஜெயலலிதா ஆகியோர் நடிப்பில் கடந்த 1969-ம் ஆண்டு வெளியான ‘தெய்வ மகன்’ திரைப்படம்தான் தமிழிலிருந்து ஆஸ்கருக்கு அதிகாரபபூர்வ என்ட்ரியாக பரிந்துரை செய்யப்பட்ட முதல் திரைப்படம். ‘உல்கா’ என்ற வங்க மொழி நாவலை மையப்படுத்தி இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. கமல்ஹாசன், மணி ரத்னம் கூட்டணியில் உருவாகி 1987-ல் வெளியான ‘நாயகன்’ திரைப்படம்தான் ஆஸ்கருக்கு அதிகாரபூர்வ என்ட்ரியாக பரிந்துரை செய்யப்பட்ட இரண்டாவது திரைப்படம். ‘தெய்வ மகன்’ திரைப்படத்திற்குப் பிறகு… கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் திரைப்படம் ‘நாயகன்’.
மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மணி ரத்னம் இயக்கிய மற்றுமொரு திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆம், ரகுவரன், ரேவதி நடித்திருந்த ‘அஞ்சலி’ திரைப்படம் 1990-ம் ஆண்டு ஆஸ்கருக்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டது. அதன் பிறகு 1992-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘தேவர் மகன்’ 65-வது ஆஸ்கர் விருது விழாவுக்கு பரிந்துரை செய்தார்கள். ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட தமிழ் படங்களின் பட்டியலில் இது இரண்டாவது கமல்ஹாசன் திரைப்படம்.
இதுமட்டுமல்ல, இதன் பிறகும் தொடர்ந்து இருமுறை கமல்ஹாசன் நடித்த திரைப்படங்களே ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 1995- ஆண்டு வெளியான ‘குருதிப்புனல்’ திரைப்படமும், 1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ திரைப்படமும் ஆஸ்கருக்கு அடுத்தடுத்து தமிழிலிருந்து பரிந்துரைக்கப்பட்டது. 1998-ம் ஆண்டு வெளியான ‘ஜீன்ஸ்’ திரைப்படமும் ஆஸ்கருக்கு இந்தியா சார்பாக பரிந்துரைக்கப்பட்டது. ஷங்கர் இயக்கத்தில் உருவான திரைப்படங்களில் ஆஸ்கருக்கு அனுபப்பட்ட இரண்டாவது திரைப்படம் இது. இதன் பிறகு மீண்டும் கமல் இயக்கி நடித்த ‘ஹே ராம்’ திரைப்படமும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. மொத்தமாக கமல் நடித்த 5 திரைப்படங்கள் ஆஸ்கருக்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
‘ஹே ராம்’ திரைப்படத்திற்குப் பிறகு 16 ஆண்டுகள் எந்த தமிழ் திரைப்படமும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படவே இல்லை. 2016-ம் ஆண்டு வெளியான வெற்றி மாறனின் ‘விசாரணை’ திரைப்படம்தான் ‘ஹே ராம்’ திரைப்படத்திற்குப் பிறகு பரிந்துரை செய்யப்பட்ட தமிழ் திரைப்படம். 5 வருட இடைவெளிக்குப் பிறகு 2021-ம் ஆண்டு இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான ‘கூழாங்கல்’ திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரு அறிமுக இயக்குநரின் படைப்பு இது. ‘கூழாங்கல்’ படத்திற்குப் பிறகு எந்த தமிழ் திரைப்படமும் ஆஸ்கரின் ‘சிறந்த வெளிநாட்டு’ திரைப்படம்’ பிரிவுக்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்படவில்லை.
இந்தாண்டு வாழை, கொட்டுக்காளி, தங்கலான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மகாராஜா, ஜமா போன்ற 6 தமிழ் திரைப்படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்வதற்கான பரிசீலனைப் பட்டியலில் இருந்திருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…