திருமலை: லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யைப் பரிசோதித்து வாங்க புதிதாக கமிட்டி அமைக்க தீர்மானித்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் கூறினார்.
திருமலையில் நேற்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: திருப்பதி லட்டுவின் தரம் பற்றிசமீப காலமாக வந்த புகார்களின்அடிப்படையில், அதனை தயாரிக்கும் மடப்பள்ளி ஊழியர்களிடம் முதலில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள், லட்டுவின் தரம் நன்றாக இருக்க வேண்டுமானால், முதலில் நெய்யின் தரம் நன்றாக இருத்தல் அவசியம் எனக் கூறினர்.
நாங்களே சுயமாக பரிசோதித்ததில் நெய்யில் தரம் இல்லை என்பது தெரிய வந்தது. நெய்யின் தரத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமாக பரிசோதனைக் கூடம் இல்லை. ஆதலால், கடந்த ஆட்சியில்நெய்யை பரிசோதனை செய்யவில்லை.5 நிறுவனங்கள் மூலம் நெய் வாங்கப்படுகிறது. நெய் ஒரு கிலோ ரூ. 320முதல் ரூ.411 வரை டெண்டர் மூலம்விலை நிர்ணயித்து தேவஸ்தானத்துக்கு வழங்கி வந்தனர். அதெப்படிதரமான நெய்யை இவ்வளவு குறைந்தவிலைக்கு வழங்க முடியும் என யோசித்தேன். நாங்கள் இது குறித்து எச்சரித்த பின்னரே சற்று தரத்தை நிறுவனங்கள் உயர்த்தின. எங்களுக்கு பிரிமியர் அக்ரிஃபுட்ஸ், க்ரிபாரம் டெய்ரி, வைஷ்ணவி,ஸ்ரீ பராக் மில்க், திண்டுக்கல் ஏஆர் ஃபுட் டயரி நிறுவனம் ஆகியவை நெய் விநியோகம் செய்து வந்தன.
கடந்த ஜூலை மாதம் 6 மற்றும் 10-ம் தேதி திண்டுக்கல் ஏஆர் ஃபுட் டெய்ரி அனுப்பிய 2 டேங்கர் நெய்யில் இருந்து மாதிரி எடுத்து, குஜராத்தில் உள்ள பிரபலமான ஒரு பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தோம். அந்த நெய்யில் கலப்படம் இருப்பதாக பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இனிமேல், நெய்யின் தரத்தைப் பரிசோதித்து வாங்க ஒரு கமிட்டி அமைக்கத் தீர்மானித்துள்ளோம். இவ்வாறு தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் தெரிவித்தார்.
ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனம் விளக்கம்: திண்டுக்கல்: திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுப்பிய நெய் தரமானது என்று திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் லெனி, கண்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் 2 கட்டமாக நாங்கள் 4 லோடு நெய் அனுப்பினோம். நாங்கள் அனுப்பிய நெய் தரச் சான்றிதழ் பெற்ற பிறகே அனுப்பப்பட்டது.
திருப்பதி தேவஸ்தானத்துக்கு எங்களை போல பல்வேறு நிறுவனங்கள் நெய் அனுப்புகின்றன. நாங்கள் அனுப்பியது 0.1 சதவீதம்கூட கிடையாது. ஒவ்வொரு முறை அனுப்பும்போதும் தரத்தைப் பரிசோதித்துள்ளோம். நாங்கள் திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுப்பிய நெய்யை அவர்களும் ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது எந்த குறைபாடும் சொல்லப்படவில்லை. அதற்கான சான்றுகளும் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.